சமீபத்தில் தன்னை நோக்கி ஒரு இளைஞர் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட சம்பவம் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“நான் சென்ற காரின் முன், இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் என்னைப் பார்த்துக்கொண்டு சென்றார். சில நொடிகளில் வண்டியை திடீரென நிறுத்தி, கோபத்துடன் காரை நோக்கி வந்தார். உடனே, வண்டியை நிறுத்த வேண்டாம், முன்னே எடுத்துச் செல்லுங்கள் என்று நான் டிரைவரிடம் கூறினேன்.
ஆனால், அந்த இளைஞர் வண்டியை வழிமறித்து நின்று, கைகளை அசைத்து சண்டையிட முயன்றார். நான் உள்ளே இருப்பது அவருக்குத் தெரிந்திருந்தும், தேவையற்ற பிரச்சனையை உருவாக்க முயன்றார். கட்சியினர் அவரை தள்ளி அனுப்பச் சொல்லியபோது கூட, அவர் வம்பிழுத்து பேசினார். இதையடுத்து, சிலர் அவரை அடிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் விரைந்து வந்து, அந்த இளைஞரை தமிழ்நாடு பார் கவுன்சில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதுவே நடந்த உண்மை. ஆனால் அண்ணாமலை போன்றோர் இதனை அரசியல் நோக்கில் திரித்து பேசுகின்றனர்,” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
மேலும், “உச்சநீதிமன்ற நீதிபதியிடம் செருப்பு வீச முயன்ற வழக்கறிஞரை கைது செய்ய வலியுறுத்தி, மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
