மதுரை: பிரதமர் நரேந்திர மோடி, ஜிஎஸ்டி வரியை குறைக்கும் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், “ஜிஎஸ்டி எனும் வரி முறையே கைவிடப்பட வேண்டும்” என்றும் விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது :
“தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக அமைப்புகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும். அவர்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதற்கான அரசாணையை அதிமுக தான் போட்டது.”
கைது நடவடிக்கைகள்
“தூய்மை பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்ததையும், வழக்குகள் பதிவு செய்ததையும் ஏற்கனவே கண்டித்துள்ளோம். அவை அனைத்தையும் திரும்ப பெற வேண்டும். போராட கூடியவர்கள், அதிமுக ஆட்சியில் தனியார்மயமாக்கல் நடந்தபோது மவுனமாக இருந்தனர். அரசியல் என்பது திமுக செய்தால் எதிர்க்க வேண்டும், அதிமுக செய்தால் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலையைப் போல் உள்ளது.”
பிரதமரின் அறிவிப்புக்கு பாராட்டு
“நல்ல அறிவிப்புகள் வந்தால், தேர்தலுக்காக செய்தாலும் மக்களுக்கு பயன் தரும் என்றால் அதை வரவேற்கவும், பாராட்டவும் எங்கள் கடமை. அதுபோல, பிரதமரின் ஜிஎஸ்டி குறைப்புச் செய்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்” என திருமாவளவன் தெரிவித்தார்.