திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் தற்கொலை: சோதனையையும் சோகத்தையும் ஏற்படுத்திய மின்னஞ்சல்!

சென்னை :
பிரபல பால் உற்பத்தியாளர்களில் ஒரான திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் பல சோகமான தகவல்களும் வெளிவந்துள்ளன.

மரணத்திற்கு முன் மின்னஞ்சல் :
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 38 வயதான நவீன் பொல்லினேனி, கடந்த 3 ஆண்டுகளாக சென்னை ரெட்டேரியில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராக பணியாற்றி வந்தார். அண்மையில், கணக்குகளை சரிபார்க்கும் பணியில், சுமார் ₹45 கோடி மதிப்பிலான மோசடி நடந்தது தெரியவந்தது. இதற்கான முதன்மையான சந்தேகமாக நவீன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, கொளத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. மன உளைச்சலில் இருந்த நவீன், தற்கொலை செய்ய முடிவெடுத்து, தனது சகோதரி மற்றும் நிறுவன மேலாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பியுள்ளார். அதில், தன்னுடைய மரணத்துக்குப் பதிலாக “உங்கள் சாம்ராஜ்ஜியத்தை என் மரணம் அசைத்துப் பார்க்கும்” என எழுதியிருந்தது.

சடலம் கண்டெடுப்பு :
நவீனின் மின்னஞ்சலைப் பெற்றதும், அவரது சகோதரி மாதவரம் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். போலீசார், நவீனின் வீடு மற்றும் அலுவலகம் என பல இடங்களில் தேடியபோது, புழல் பகுதியில் அவர் சொந்தமாக வாங்கியிருந்த இடத்தில் அமைந்த குடிசையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவர் சடலம் மீட்கப்பட்டது.

சடலம் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டது. புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னஞ்சலில் எழுந்த குற்றச்சாட்டு :
தற்கொலைக்கு முன் அனுப்பிய மின்னஞ்சலில், நவீன் — “நரேஷ் மற்றும் முகுந்த் ஆகியோர் தன்னை மிரட்டி, பணத்தை திருப்பிக் கொடுத்தாலும் சிறையில் முடிக்கப்படுவாய் என்று அச்சுறுத்தியதாக” குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திருமலா பால் நிறுவனமே தன்னுடைய தற்கொலைக்கு நேரடி காரணம் என்றும், “மோசடியை தொடர்பான ஒப்பந்தம் செய்யலாம்” என்று கூறிய போதும் நிறுவனம் அதை நிராகரித்து, “தன்னை திட்டமிட்டு சித்திரவதை செய்தது” என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

விசாரணையில், நவீன் திருமணம் செய்யாதவர் என்றும், புழலில் 4 கிரவுண்டுகள் நிலத்தை வாங்கியிருந்ததும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான சொகுசு வாகனங்களும் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

Exit mobile version