தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், முன்பருவக் கல்வி பயிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் திருக்குறள் ஒப்புவிக்கும் பயிற்சி அளிக்கும் புதிய முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் உள்ள 1065 அங்கன்வாடி மையங்களில் சுமார் 20,290 குழந்தைகள் முன்பருவக் கல்வி பயின்று வருகின்றனர். இம்மையங்களில் குழந்தைகளுக்குத் தினமும் சரிவிகித ஊட்டச்சத்து வழங்கும் வகையில் அவித்த பயறு வகைகள் மற்றும் முட்டை உள்ளிட்ட சத்துணவுகள் வழங்கப்படுவதோடு, அவர்களின் ஆரம்பகாலக் கற்றல் திறனை மேம்படுத்தப் பாடல்கள், விளையாட்டு மற்றும் கதைகள் வாயிலாகப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தொடக்கத்தில் மையங்களுக்கு வரத் தயங்கும் குழந்தைகள், அங்கன்வாடி பணியாளர்களின் கனிவான கவனிப்பாலும், சக நண்பர்களின் சேர்க்கையாலும் ஆர்வத்துடன் கல்வி கற்கத் தொடங்குகின்றனர்.
வழக்கமாகத் தமிழ் உயிர் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள், எண்கள், ஆத்திச்சூடி மற்றும் குழந்தைப்பாடல்கள் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டு முதல் மாணவர்களின் தார்மீக விழுமியங்களை மேம்படுத்தத் திருக்குறள் பயிற்சியைத் தேனி மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கற்றல் திறன் மிக அதிகமாக இருக்கும் என்பதால், இந்த வயதில் விதைக்கப்படும் அறிவு வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் என்ற உளவியல் ரீதியான நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தினமும் குழந்தைகள் 2 அல்லது 3 திருக்குறள்களை எளிதாக நினைவில் கொள்ளும் வகையில், அங்கன்வாடி அமைப்பாளர்கள் அவற்றைப் பாடல்கள் மூலம் கற்பித்து வருகின்றனர்.
இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், “குழந்தைகள் அங்கன்வாடியை முடித்துவிட்டு முதலாம் வகுப்பிற்குச் செல்லும்போது, குறைந்தபட்சம் 10 திருக்குறள்களையாவது மனப்பாடமாக ஒப்புவிக்கும் நிலையை உருவாக்குவதே எங்களது இலக்கு. தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஒரு திருக்குறளையாவது முழுமையாகக் கூறும் நிலையை எட்டியுள்ளனர். சில மையங்களில் உள்ள சுட்டி குழந்தைகள் தற்போதே 5 திருக்குறள்களுக்கு மேல் ஒப்புவித்து வியக்க வைக்கின்றனர்,” எனத் தெரிவித்தார். உலகப் பொதுமறையாம் திருக்குறளை மழலை வயதிலேயே குழந்தைகளுக்குக் கொண்டு செல்லும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் ஒரு பண்பட்ட தலைமுறையை உருவாக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
