“எனது தாயை அவமதித்துவிட்டனர்” – வேதனையுடன் பேசிய பிரதமர் மோடி

காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சியினர் தனது தாயாரை அவமதித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கடும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பீஹாரில் நடந்த நிகழ்ச்சியில் டில்லி வழியாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றிய அவர்,
“அம்மா தான் உலகம். அம்மா தான் எங்கள் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த பீஹாரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை நினைத்தாலே எனக்கு வலி அதிகமாகிறது. என் தாயாரை அவமதித்துவிட்டனர். இது என் தாயையே மட்டுமல்ல, நாட்டு தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்ததாகும்” என உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.

அவர் மேலும், “என் இதயத்தில் இருக்கும் வலி, பீஹார் மக்களின் இதயத்திலும் இருக்கிறது. அரசியலோடு எந்தவித தொடர்பும் இல்லாத என் தாயாரை ஏன் காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சியினர் விமர்சித்தனர் ? என் தாயார் உயிருடன் இல்லை என்பதை அனைவரும் அறிந்ததே. சில மாதங்களுக்கு முன்பு 100 வயதில் அவர் மறைந்தார். வறுமையில் என்னை வளர்த்தவர், தனது குடும்பத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமித்தவர் என் தாயார். அவரை இப்படிப் பழிப்பது மிகவும் வேதனையானது” என வலியுறுத்தினார்.

என்ன நடந்தது?

பீஹாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி யாத்திரை நடத்தி வருகிறது. அந்த யாத்திரையின் போது தர்பங்காவில் சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடியையும், அவரது மறைந்த தாயாரையும் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தினர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் போஸ்டர்கள் மேடையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version