அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் உள்ளிட்ட நகரங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசுகையில் விசிக தலைவர் திருமாவளவன், அமெரிக்க வரி பிரச்சனை, அதானி–அம்பானி தொடர்புகள் உள்ளிட்ட பல அம்சங்களில் மத்திய அரசைத் தாக்கினார். “சனாதன ஃபாசிசம் ஒருபுறம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஃபாசிசம் மறுபுறம். இந்த மக்கள் விரோத சக்திகளை வீழ்த்த தளபதி ஸ்டாலின் தலைமையில் கைகோர்த்து நிற்கிறோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும், “2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக பலரை களமிறக்கி விடுகிறது. அவர்கள் பாஜகவுக்கு நேரடி உறவில்லையென்று சொல்லிக் கொள்வார்கள். எங்களுக்கும் பாஜக எதிரியே என்பார்கள். ஆனால் உண்மையில் பாஜகவுக்காகவே களமிறங்குகிறவர்கள் அவர்கள். யாரையும் குறிவைத்து அல்ல; அரசியலைப் புரிந்துகொள்ளச் சொல்கிறேன்,” என்று தெரிவித்தார்.
திருமாவளவனின் இந்தக் கருத்துக்கள் நடிகர் விஜயை நோக்கியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. காரணம், விஜயின் முதல் அரசியல் மாநாட்டிற்கு முன்பு வாழ்த்து தெரிவித்திருந்தாலும், அதன் பிறகு தொடர்ந்து அவர்மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் திருமா. “விஜயின் பேச்சுகளில் தெளிவான பார்வை இல்லை, அவரது அரசியல் குழப்பத்தில் உள்ளது” என்று முன்பே அவர் தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருப்பூரில் அவர் பேசிய சமீபத்திய கருத்துக்களும் விஜயை குறிவைத்தவையாகவே பார்க்கப்படுகின்றன. அதேசமயம், “ஆட்சி பங்கு, அதிகார பங்கு என்ற ஆஃபர் வந்தாலும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம்” என்ற உறுதியையும் திருமாவளவன் வெளிப்படுத்தியதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். இது, திமுக கூட்டணிக்கான பக்கபலமாக விசிக தொடர்ந்தும் செயல்படும் என்பதையும் வலியுறுத்துவதாகக் கருதப்படுகிறது.