ஆப்கானிஸ்தான் :
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லை பகுதியில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜூதின் ஹக்கானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம் தலிபான் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இரு நாடுகளுக்குமிடையே மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழலில், ஆப்கான் தலைநகர் காபூலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிராஜூதின் ஹக்கானி, “சிலர் அறிந்தும் அறியாமலும் நெருப்புடன் விளையாடுகிறார்கள். நாங்கள் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால் எங்கள் நிலத்தையும் மக்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,”
என்று எச்சரிக்கை விடுத்தார்.
அவரது இந்தக் கருத்து பாகிஸ்தானை நோக்கிய எச்சரிக்கையாக கருதப்படுகிறது. இரு நாடுகளுக்குமிடையே எல்லை வரம்பு குறித்த பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 2021ல் தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த பிறகு, இரு தரப்புக்குமிடையே மோதல்கள் அதிகரித்தன.
சமீபத்தில் காபூலில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என தலிபான் அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. பின்னர் துருக்கி மற்றும் கத்தார் நாடுகள் நடுவராக இருந்து இருதரப்புக்கும் இடையே தற்காலிக சமாதானம் ஏற்பட்டது.
ஆனால், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் தொடங்கியதால், தலிபான் தரப்பில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ பதில் பாகிஸ்தான் அரசால் இதுவரை வழங்கப்படவில்லை.
 
			















