திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நகரில் நூற்றுக்கணக்கான தனியார் தங்கும் விடுதிகளும், மத்திய அரசின் ‘பிரெட் அன் பிரேக்பாஸ்ட்’ (Bed and Breakfast) உரிமம் பெற்ற ஹோம்ஸ்டேக்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் கொடைக்கானலில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட ‘கொடைக்கானல் ஹோம்ஸ்டே அசோசியேஷன்’ என்ற சங்கம், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு, தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடக்கும் சம்பவங்கள் குறித்துப் பரபரப்புப் புகார்களை வெளியிட்டுள்ளது. புதிதாக ஹோம்ஸ்டேக்களை நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் காட்டேஜ்களை ஒப்பந்தம் எடுத்துள்ள சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்தச் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
ஹோம்ஸ்டே சங்கத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் கொடைக்கானலில் பெரும் முதலீடு செய்து கட்டிடங்களை அமைத்துள்ளோம். அதேபோ[hல, காட்டேஜ்களை ஒப்பந்தம் எடுத்துத் தொழில் செய்து வருகிறோம். எங்களது விடுதி அறைகளின் புகைப்படங்களைக் கொடுத்து, எங்களுடைய பணியாளர்கள் மூலமாகவே நேரடியாகச் சுற்றுலாப் பயணிகளை அணுகி அறைகளை வழங்கி, எங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். ஆனால், எங்களது இந்த நேரடி வர்த்தக முறையைச் சுற்றுலா வழிகாட்டிகள் (Tourist Guides) தடுக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். மேலும், “சுற்றுலா வழிகாட்டிகளும் தாங்கள் பரிந்துரைக்கும் விடுதிகளின் அறைகளை நிரப்பலாம்; நாங்களும் எங்களுடைய நேரடி முயற்சிகளின் மூலம் எங்கள் விடுதி அறைகளை நிரப்ப உரிமை உண்டு. இதை யாரும் தடுக்கக் கூடாது” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மிக முக்கியமாக, தங்கும் விடுதி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கும் விதமாக ஒரு குற்றச்சாட்டையும் ஹோம்ஸ்டே அசோசியேஷன் முன்வைத்தது. அதாவது, தங்களது விடுதிகளில் உள்ள அறைகளைச் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு நிரப்புவதற்குச் சுற்றுலா வழிகாட்டிகள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் கொடுக்க மறுத்தால், தங்களது தொழிலைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஹோம்ஸ்டே உரிமையாளர்கள், தங்களது நியாயமான வர்த்தகத்தைத் தடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மோதலுக்குப் பின்னணியாக, இதற்குச் சில தினங்கள் முன்பு நடந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தையும் நினைவுகூர வேண்டியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி நுழைவுவாயில் பகுதியில், சுமார் 100க்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் ஒன்று திரண்டு கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில தனியார் ஹோட்டல் பணியாளர்கள் நேரடியாகச் சுற்றுலாப் பயணிகளிடம் சென்று அறை எடுக்கும்படி கூறி வருவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, வழிகாட்டிகள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். கொடைக்கானலின் முக்கியத் தொழிலான சுற்றுலாவை நம்பி இயங்கும் ஹோம்ஸ்டே உரிமையாளர்களுக்கும், உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தப் பணப் பரிவர்த்தனை மற்றும் வாழ்வாதாரப் போட்டி, சுற்றுலாச் சூழலில் ஒரு பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அரசுத் துறையினர் இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

















