தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தென்னை நார் உற்பத்தியாளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மின்கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், தொழில்துறையை மேம்படுத்த மாநில அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை. அதேசமயம், லஞ்சம் மற்றும் ஊழல் முறைகள் அதிகரித்துள்ளன,” என்றார்.
மேலும், பெண்களுக்கு மாநில அரசு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறினாலும், அதன் பாதி பெறுவோருக்கும் அந்த தொகை கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார். “பெண்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அதையே ‘ஓசி பஸ்’ என அவர்களே கேலி செய்கிறார்கள்,” என்றும் கூறினார்.
அதற்கு மேலாக, தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி திட்டங்களை மாநில அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும், மாநிலத்தின் நிதிநிலையை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.