கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் மோதி ஏற்பட்ட விபத்து உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
260 பேர் உயிரிழந்த இந்த பயங்கர சம்பவத்தில், விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். 242 பயணிகள் மற்றும் குழுவினர்கள் சென்ற இந்த விமான விபத்து குறித்து விமான விபத்து விசாரணை அமைப்பு (AAIB) முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
அதில், “இரண்டு இன்ஜின்களுக்குமான எரிபொருள் கட்ஆஃப் ஸ்விட்சுகள், 1 வினாடி இடைவெளியில், ஒருவருக்கொடுத்து ஒருவராக செயல்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியா முழுவதும் உள்ள போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களில் இந்த ஸ்விட்சுகளை ஆய்வு செய்யவும், ஜூலை 21க்குள் ஆய்வுப் பணிகளை முடிக்கவும், விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின்படி, ஏர் இந்தியா வைத்துள்ள அனைத்து போயிங் 787 விமானங்களிலும் தொழில்நுட்ப குழுவினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அதன் பின்னணியில், “எந்தவித கோளாறும் எரிபொருள் ஸ்விட்சுகளில் கண்டறியப்படவில்லை” என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் பெரும்பாலான போயிங் 737 மேக்ஸ் விமானங்களிலும் பறப்புக்கு முன் அதேபோல் முழுமையான சோதனை நடைபெற்று, அவற்றிலும் எந்தவித குறைபாடும் இல்லை என நிறுவனம் அறிவித்தது.