தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமைக் கட்சி என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவுக்கு மீண்டும் இடமளிக்கும் வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவும் அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது. இதனையடுத்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணியை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதிமுக – பாமக இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும் ஈபிஎஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த 5ஆம் தேதி திருச்சிக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்தார். அதன் தொடர்ச்சியாகவே, பாமக கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. பாமக கூட்டணி உறுதியான பின்னர் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இந்த சந்திப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது, தேமுதிகவின் நிலைப்பாடு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமமுக தொடர்பான அரசியல் சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷாவிடம் விளக்கியதாக தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையில் தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்ற அமித் ஷாவின் கருத்து தொடர்பாக எழுந்த கேள்விக்கு, “தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை” என உறுதியாக பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என தெளிவாகக் கூறினார். ஆனால், டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியம் குறித்து கேள்வி எழுந்தபோது, அதனை மறுத்தோ அல்லது உறுதிப்படுத்தியோ பேசாமல், சூசகமான பதிலை மட்டுமே வழங்கினார். மேலும், இன்னும் சில கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்த ஈபிஎஸ், தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டார்.

















