திருநெல்வேலி :
திருநெல்வேலியின் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில், “வாக்கு திருட்டை தடுப்போம் – ஜனநாயகத்தை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில்,மோடி தலைமையிலான மத்திய அரசு வாக்கு திருட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளதால் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. தாமிரபரணி நதி தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கையை வெளியிடாமல் தடுத்து நிறுத்திய பாஜக அரசை கண்டிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும், வாக்கு திருட்டை தடுப்பதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என உறுதிமொழியும் மாநாட்டில் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசுகையில் ப.சிதம்பரம், “மகாதேவ்புரா நாடாளுமன்ற தொகுதியில் ஒரே சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் முன்னணி என தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடிப்படையாகக் கொண்டு ராகுல் காந்தி வாக்கு திருட்டு நடந்ததை அம்பலப்படுத்தினார். போலியான முகவரிகள், போலியான நபர்கள் சேர்த்தல் போன்ற முறையில் வாக்கு மோசடி நடந்துள்ளது. இருந்தும், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த மறுத்தது. இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி அந்த தொகுதியை இழந்தது,” எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும்,
“மகாராஷ்டிரா, கர்நாடகத்தில் நடந்தது போலவே தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பாஜக சதியை பின்னக்கூடிய கட்சியாக உள்ளது. ஆனால் அதனை நடக்க விடமாட்டோம். திமுக, அதிமுக என கட்டுக்கோப்பான அணிகள் உள்ளதால் தமிழகத்தில் வாக்கு திருட்டை முறியடிக்க முடியும். ஆனால் தற்போது அதிமுக அணியில் பாஜக புகுந்துவிட்டது. ‘ஆமை புகுந்த வீடும், அமினா புகுந்த வீடும் உருப்படாது’ எனப் பழமொழி ஒன்று உண்டு; அதுபோல பாஜக புகுந்த கூட்டணியும் உருப்படாது.
தமிழகத்தில் நியாயமான தேர்தல் நடைபெற அனைவரும் மே மாதம் வரை விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது. வாக்கு திருட்டை தடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது,” எனவும் சிதம்பரம் வலியுறுத்தினார்.