தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால், எந்த இடத்திலும் ஜாதி அல்லது மத ரீதியான வன்முறைகளுக்கு அரசு இடம் கொடுக்காது என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு ₹605 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒரு லட்சம் வீடுகளுக்கு குடிநீர்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின் பேரில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, சேர்மா தேவி, களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் ராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 கிராமங்களுக்குட்பட்ட சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், ₹605 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தாமிரபரணி ஆற்றில் இருந்து மேலமுன்னீர்பள்ளம் பகுதியில் தண்ணீர் எடுக்கப்பட்டு, சிங்கி குளம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. இதற்காக 297 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு வார காலத்திற்குள், சிங்கி குளத்தில் இருந்து ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திசையன்விளையில் உள்ள உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும். அநேகமாக, அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
கேள்வி – பதில்
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: பொறுப்பு டிஜிபி நியமனம் தொடர்பாக பா.ஜ.க.வினர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்களே?
பதில்: தமிழக அரசைப் பொறுத்தவரை, எந்த நியமனமாக இருந்தாலும் அது விதிமுறைகளுக்குட்பட்டு, சட்டப்படிதான் நடைபெறும். இதில் எந்த விதிமீறலும் இல்லை. ஒன்றிய அரசில்தான், அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளில் தங்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பதும், அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதும் நடக்கிறது. உச்ச நீதிமன்றமே கண்டிக்கும் அளவுக்கு ஒன்றிய அரசின் செயல்பாடுகள் உள்ளன. எனவே, இந்த நியமனம் குறித்து நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும்.
கேள்வி: திருநெல்வேலியில் சாதி வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றனவே?
பதில்: தமிழகத்தில் எந்த இடத்திலும் ஜாதி அல்லது மத ரீதியான வன்முறைகள் நடைபெறவில்லை. தனிப்பட்ட நபர்களுக்கு இடையே அல்லது மாணவர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு, சிலர் ஜாதி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். தவறு யார் செய்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேள்வி: முதல்வர் வெளிநாடு பயணம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?
பதில்: மாண்புமிகு முதல்வர் அவர்கள், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காகவும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும்தான் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அவருடன் தொழில் துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே செல்கின்றனர். ஆனால், பாரதப் பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அவருடன் யார் செல்கிறார்கள், அங்கு என்ன பேசப்படுகிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. தமிழகத்தில், 2021-ம் ஆண்டு 14.71 லட்சமாக இருந்த குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, இந்த நாலரை ஆண்டுகளில் 17 லட்சமாக உயர்ந்து, 33 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் முதல்வரின் பயணத்திற்கான வெற்றி.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.
















