தேனி மாவட்டம் குச்சனூரில் அமைந்துள்ள சனிஸ்வர பகவான் கோவில், தமிழகத்தின் முக்கிய சனி பரிகாரத் தலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வருகின்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள், திருவிழாக்கள் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுவாக திருவிழா மண்டபத்தில் புனித நீர் தெளித்து, கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். தொடர்ந்து சனிஸ்வரர்-நிலாதேவி திருக்கல்யாணம், வீதியுலா, சக்தி கரகம் எடுத்தல், கருப்பண்ணசாமிக்கு மதுபான படையல், பக்தர்களுக்கான கறி விருந்து உள்ளிட்ட நிகழ்வுகள் ஐந்து வாரங்கள் முழுவதும் நடைபெறும்.
முன்னதாக, கோவில் நிர்வாகத்தை ஒரு பரம்பரை அறங்காவலர் குழு மேற்கொண்டு வந்தது. ஆனால், அதில் ஏற்பட்ட சிக்கல்களால் 2011ம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறை நேரடியாக கோவிலை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், அறங்காவலர் குழுவினர் நிர்வாகத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க கோரி, மேலும் அறநிலையத்துறை விழாக்களை நடத்தக் கூடாது என வலியுறுத்தியும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் பின்னணியில், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கோவிலில் ஆடி மாத திருவிழா நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான கொடியேற்றம் இம்முறையும் நடைபெறாது.
ஆனால், வழக்கமான தின பூஜைகள், சனிக்கிழமைகளின் சிறப்பு வழிபாடுகள் என்ற நிலைபாடுகளுக்கு மாற்றமில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இயலும்.
ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், தொலைதூரங்களில் இருந்து வரும் பக்தர்களை கருத்தில் கொண்டு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.