மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாமணிராஜ்(35). பிஇ பட்டதாரியான இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். இதையடுத்து, இவரது வீட்டில் சிறு வயதில் இருந்தே வீட்டு வேலைகள் செய்து வளர்ந்து வந்த, பெற்றோர் இருவரையும் இழந்த மார்த்தாள்ஞான செல்வி (30) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஜூன் 20 ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த விபரம் அறிந்த மாமணிராஜின் பெற்றோர், மருமகள் தங்கள் குடும்ப கௌரவத்துக்கு பொருத்தமானவர் இல்லை எனக் கூறி, மாமணி ராஜ் வேலை நிமித்தமாக வெளியூர் சென்று இருந்த போது, மார்த்தாளை வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்கள். இந்நிலையில் தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு மார்த்தாள் இன்று மாமணிராஜின் குடும்பத்தாரிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது மாமணிராஜின் குடும்பத்தார் மார்த்தாளை தாக்கி, வீட்டை விட்டு விரட்டியதாகவும், மாமணிராஜின் தாயார் (வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்) ரூ.50000 பணம் தருவதாகவும் அதை வாங்கிக் கொண்டு தனது மகனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு போக சொல்லி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மயங்கிய நிலையில் வீட்டுக்கு வெளியில் கிடந்த மார்த்தாளை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
