கேரள சிறைக்குக் கொண்டு சென்றபோது தமிழக போலீஸாரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிய பிரபல ரவுடி பாலமுருகனின் மனைவி, தன் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டுத் தானும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) மீது தமிழகம் மற்றும் கேரளாவில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் என 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் கேரள சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, போலீஸாரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடினார். அவர் கடையம் மலைப்பகுதியில் பதுங்கியிருந்தபோது, அவரைத் தேடிச் சென்ற 5 போலீஸார் மலையில் சிக்கி, பின்னர் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
தனது கணவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருவதாலும், குடும்பச் சூழல் காரணமாகவும் மன உளைச்சலில் இருந்த பாலமுருகனின் மனைவி ஜோஸ்பினாள் (35), தனது மூன்று குழந்தைகளுடன் ஊத்துமலை அருகே உள்ள மருதுபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்குச் சென்றார். கடந்த 8-ஆம் தேதி, ஜோஸ்பினாள் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்தார்.
மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்குச் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு ஜோஸ்பினாள் உயிரிழந்தார். தற்போது அவரது இரு பெண் குழந்தைகளுக்கும் (மகாலெட்சுமி மற்றும் பிரியதர்ஷினி) தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 5 வயது மகன் தர்ஷன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான்.
இந்தச் சோகமான சம்பவம் குறித்து ஊத்துமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரவுடி பாலமுருகனைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையைப் போலீஸார் ஒருபுறம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தக் குடும்பத் தற்கொலை முயற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

















