சென்னை அருகே நங்கநல்லூர் என்னுமிடத்தில் அருள்மிகு சர்வமங்களா தேவி சமேத தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் கருவறையைச் சுற்றி நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர் காட்சி தருகிறார்கள். விஷ்ணு துர்க்கை, சுப்பிரமணியர், பைரவர், வீரபத்திரர், நவக்கிரங்களுக்கு தனி சன்னதி உள்ளது.
சோழ சக்கரவர்த்தி ராஜராஜன் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த போது காரியாதித்த சோழன் குறுநில மன்னனாக இருந்தான். இவன் தன் ஆளுகைக்குட்பட்ட பகுதி கோயில்களில் உழவாரப்பணி செய்தான்.
ஒரு முறை இவன் தன்மீச்வரம் வந்தபோது அங்கு பசுமையாக வயல்வெளிகள் காட்சி தந்ததை பார்த்து அன்றிரவு அங்கேயே தங்கினான்.
இரவு முடிந்து பகல் விடிந்தும் அரசன் எழுந்திருக்காததை கண்ட வீரர்கள், அவனை எழுப்பவும் பயந்தனர். இந்த நேரத்தில் கோயில் மணி ஓசை மிக சத்தமாக கேட்டது. மன்னன் விழித்துக் கொண்டான். ஓசை வந்த திசை நோக்கி சென்ற சோழ மன்னனுக்கு லிங்க வடிவில் காட்சி தந்தார் சிவன். இந்த தரிசனத்தினால் மன்னன் மகிழ்ந்தாலும், கோயில் மிகவும் சிதிலமடைந்திருப்பது கண்டு வருந்தினான். அத்துடன் தன்னை எழுப்பிய ஈசனின் ஆலயத்தில் தினமும் கோயில் மணியோசை கேட்க வேண்டும் என நினைத்தான்.

கோயில் திருப்பணிக்காவும், பூஜை நேரங்களில் இசைக் கருவிகள் முழங்குவதற்கும், அத்தலத்தின் அருகே உள்ள நிலங்களின் வருமானத்தை வழங்க முடிவுசெய்தான். சந்திர சூரியர்கள் உள்ளவரை கோயில் சிவப்பணி தொடர்வதற்காக இந்த நிலங்களை அளிப்பதாக கோயில் கல்வெட்டுக்களில் பொறித்தான்.
அம்மன் கோயில்களில் தீபாராதனையின் போது “சர்வமங்கள மாங்கல்யே சிவே’ என்ற மந்திரம் கூறுவார்கள். இந்த சர்வமங்களா தேவி இத்திருத்தலத்தில் தான் அருள்பாலிக்கிறாள். இவளது திருநாமம் லலிதா சகஸ்ரநாமத்தில் இருநூறாவதாக இருக்கிறது.
சோழர் காலத்திற்கும் முற்பட்ட இத்தலத்தின் புராதனப்பெயர் தன்மீச்வரம். இறைவன் தர்மலிங்கேஸ்வரர். இவருக்கு தன்மீஸ்வரர், வீரசிங்கர் என்ற திருநாமங்களும் உண்டு. அம்மன் சர்வமங்களா தேவி. தலவிருட்சம் வில்வம். இங்கு சக்தியின் ஆட்சி நடக்கிறது. எழிலான மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கயிலைநாதனும், ராஜராஜேஸ்வரியும் சுதை சிற்பமாக காட்சி தருகிறார்கள். அம்பிகை சர்வமங்களா சற்று சாய்ந்த நிலையில் நளினமாக தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சர்வ மங்களத்தையும் வாரி வழங்கி கொண்டிருக்கிறாள்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிN~கம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
மாதம்தோறும் இத்தலத்தில் இரண்டாம் ஞாயிறுகளில் ஏகாதச ருத்ர ஹோமமும், கும்பாபிN~கம் நடந்த திதியை ஒட்டி நடக்கும் பவித்ரோற்சவமும் விழாக்களாகும்.