ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் முதுகுளத்தூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில், போதிய உலர்களம் வசதி இல்லாத காரணத்தால் விவசாயிகள் விளைபொருட்களைப் பிரதான சாலைகளில் உலர வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதியில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக உளுந்து, கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாகப் பேரையூர், மருதங்கநல்லூர், கருங்குளம், பாக்குவெட்டி போன்ற கிராமங்களில் தற்போது சிறுதானிய அறுவடை தீவிரமடைந்துள்ளது. ஓரளவு நல்ல மகசூல் கிடைத்துள்ள நிலையில், அறுவடை செய்த தானியங்களைப் பிரித்தெடுக்கவும், காய வைக்கவும் இடமில்லாமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் வேறு வழியின்றி, கமுதி – பரமக்குடி சாலை, கமுதி – அபிராமம் சாலை போன்ற அதிகப் போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளிலேயே விளைபொருட்களை விவசாயிகள் பரப்பி வைத்துள்ளனர். வாகனங்கள் ஏறிச் செல்லும்போது தானியங்கள் பிரிந்து வரும் என்பதால், ஆபத்தை உணராமல் இத்தகைய செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் தானியங்கள் மற்றும் அதன் கழிவுகள் பரப்பப்படுவதால், இருசக்கர வாகனங்கள் நழுவி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கனரக வாகனங்கள் மோதும் அபாயமும் உள்ளதால், இது விவசாயிகளின் உயிருக்கும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இது குறித்துப் இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “எங்கள் பகுதியில் ஒவ்வொரு கிராமத்திலும் உலர்களம் அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கை. பல இடங்களில் பழைய உலர்களங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. திறந்தவெளி இடங்களில் தானியங்களைக் கொட்டினால் கால்நடைகளால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவேதான், வேறு வழியின்றி சாலைகளைப் பயன்படுத்தி வருகிறோம். அரசு போர்க்கால அடிப்படையில் கிராமந்தோறும் சிமெண்ட் உலர்களங்களை அமைத்துத் தந்தால் மட்டுமே இந்த ஆபத்தான நிலைக்குத் தீர்வு காண முடியும்,” எனத் தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் நலன் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத் துறை இணைந்து கூடுதல் உலர்களங்களை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

















