ஒன்றாக இணையும் மூவர்… அதிர்ச்சியில் எடப்பாடி !

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக மூத்த தலைவர் டி.செங்கோட்டையன் ஒரே காரில் இணைந்து பசும்பொன் நோக்கி புறப்பட்டது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, இருவரும் பசும்பொனில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக மதுரையிலிருந்து இணைந்து பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாகவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் செங்கோட்டையனுக்கு கருத்து வேறுபாடு நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. எடப்பாடிக்கு ஆதரவாக கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமலும், பின்னர் கட்சியின் நடவடிக்கைகளில் தூரம் வைக்காமலும் அவர் நடந்துகொண்டது பலரின் கவனத்தை ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன், கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்தார். பின்னர் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேச்சுப்பொருளாக மாறியது.

இந்நிலையில் பசும்பொன் பயணத்தின் போது ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஒரே காரில் இருப்பது, இருவரும் மீண்டும் நெருக்கம் காண்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் அதிமுகவின் உள்நிலை அரசியலில் புதிய சமன்பாடுகள் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

அதே நேரத்தில், ஓபிஎஸ் – டிடிவி தினகரன் – சசிகலா ஆகியோர் மீண்டும் ஒருங்கிணைய வாய்ப்புகள் பேசப்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையனின் இந்த நட்பு முயற்சி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிலவி வரும் அதிருப்தி சூழலில், எதிர்த்தரப்பினரின் இந்த ஒருங்கிணைவு அதிமுகவுக்கு மேலும் தலைவலி கொடுக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

Exit mobile version