சென்னை:
‘நெல்லை பாய்ஸ்’ திரைப்படத்தின் முன்னோட்டமும் இசை வெளியீட்டு விழாவும் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றினார்.
திரைப்படங்களில் தென் மாவட்டங்களைப் பற்றிய தரக்குறைவான சித்தரிப்பு தொடர்ந்து நடப்பதாக அவர் கவலை தெரிவித்தார்.
திரைப்படங்களில் வன்முறை ஆதிக்கம் – திருமாவளன் கேள்வி
நிகழ்ச்சியில் பேசின அவர்,
“நெல்லை என்றாலே அரிவாள் கலாசாரம்’ என்ற தவறான தோற்றத்தை திரைப்படங்கள் உருவாக்கி வருகின்றன. ஒரு ஹீரோவாக இருக்க, அவன் பத்து பேரைக் கொட்ட வேண்டும், நூறு பேரை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் ஏன்? வன்முறை இல்லாமல் ஒரு நல்ல படம் எடுக்க முடியாதா?” என்று கேட்டார்.
திரைப்படங்களில் காட்டப்படுவது போல மக்களிடையே வன்முறை கலாச்சாரம் உள்ளதா என்ற கேள்வியும் அவர் எழுப்பினார். “இயக்குநர்கள் இந்தப் போக்கை மாற்றி சிந்திக்க வேண்டும்” எனவும் கூறினார்.
“நெல்லை கல்வி, கலாச்சாரம், சாதனைகளின் நிலம்” தென் மாவட்டங்களை வன்முறையுடன் மட்டும் இணைக்கும் நடைமுறையை அவர் கண்டித்தார்.
“நெல்லையில் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள், பல துறைகளில் சாதனையாளர்கள் அதிகம். இத்தகைய பெருமைகளை மறைத்து அருவாள் கலாசாரம் மட்டும் காட்டுபவர்கள் தவறாக செய்கிறார்கள்,” என்றார்.
வீரம் மற்றும் வன்முறை – இரண்டின் வேறுபாடு
90களில் மதுரையில் இயக்கப் பணிகளில் ஈடுபட்டபோது தனது தோழர்களிடம் கூறிய கருத்தை நினைவுபடுத்திய திருமாவளவன், “வீரம் என்றால் அரிவாளை தூக்குவது அல்ல. நெருக்கடிகளிலும் கொள்கையை விடாமல் நிற்பதே உண்மையான வீரியம். முரட்டுத்தனம், மூர்க்கம், நிராயுதபாணிகளை தாக்குவது இவை எதுவும் வீரம் அல்ல,” என்று வலியுறுத்தினார்.
“ரவுடிசத்தை ஹீரோவாக்கும் நடைமுறை ஆபத்து”
சமீபத்திய படங்களில் ரவுடிசம் பெரிய அளவில் கொண்டாடப்படுவது குறித்து அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். “சமூக மாற்றம் என்பது வன்முறை மூலம் வர வேண்டியதில்லை. புரட்சி என்பது முற்றிலும் வேறு. வன்முறை என்பது வேறு,” என்று கூறினார்.
அம்பேத்கரின் சமூகப் புரட்சியை குறிப்பிட்ட அவர், “ஆயுதமில்லாமல் மாற்றத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். அவர் உருவாக்கிய அரசமைப்பு இன்று இந்திய அரசியலின் மையம். இதுவே மிகப்பெரிய புரட்சி,” என்று விளக்கினார்.



















