நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே உள்ள மாவநல்லா பகுதியில் கடந்த மாதம் மூதாட்டியைக் கொன்ற புலி, வனத்துறையினர் வைத்த பிரத்யேக கூண்டில் நேற்று இரவு சிக்கியது. இதனால், புலி நடமாட்டத்தால் பீதியில் இருந்த அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சில சமயங்களில் புலிகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்து மனித-விலங்கு மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
கடந்த நவம்பர் 24ஆம் தேதி மசினகுடியை அடுத்த மாவநல்லா பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாள் என்ற மூதாட்டியை புலி ஒன்று தாக்கி இழுத்துச் சென்றது. இதில், மூதாட்டியின் உடல் தலை மற்றும் உடல் தனித்தனியாகக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டது. மூதாட்டியைத் தாக்கிய, டி-37 என்ற வகையைச் சார்ந்த 12 வயது ஆண் புலியைப் பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். புலி நடமாட்டம் இருந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. புலியைப் பிடிப்பதற்காக முதலில் 4 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. ஆனால், அந்தக் கூண்டில் சிக்காமல் புலி போக்கு காட்டி வந்தது. வனத்துறையினர் இரவு, பகலாக ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும், 29 இடங்களில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.
புலி நடமாட்டம் காரணமாக மாவநல்லா சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் மத்தியில் பீதி நிலவியது. பொது மக்கள் வனப்பகுதிக்குள் செல்வதைத் தவிர்க்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும், இங்குள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்து பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் வனத்துறை வாகனங்கள் மூலமாகவே அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரவும், புலியை விரைந்து பிடிக்கவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, புலியைப் பிடிப்பதற்காக இரை வைக்கப்பட்டு ஒரு பிரத்யேக கூண்டு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அந்தப் புலி, வனத்துறையினர் வைத்த அந்தப் பிரத்யேக கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய அந்தப் புலியை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவதற்கான நடவடிக்கையில் தற்போது முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியதால் மாவநல்லா பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
