சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் மாலை நேரப் பொழுதுபோக்கிற்காக, மகர் நோன்பு திடலில் ‘நற்பவி கிரியேட்டர்ஸ்’ சார்பில் பிரம்மாண்டமான பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியின் மிக முக்கிய ஈர்ப்பாக, கொடைக்கானலின் புகழ்பெற்ற குணா குகையை நினைவுபடுத்தும் வகையில் தத்ரூபமான குகை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வினோதக் குகைக்குள் நுழையும் பார்வையாளர்கள் ஒரு நிஜமான குகைக்குள் செல்லும் உணர்வைப் பெறும் வகையில் ஒலியும் ஒளியும் அமைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொருட்காட்சியின் சிறப்பம்சங்கள் குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் கூறுகையில், “பொதுமக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தர வேண்டும் என்ற நோக்கில், திகில் குகை, செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் தானியங்கி முறையில் இயங்கும் இயந்திர மிருகங்களின் உருவங்களை அமைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார். சிறுவர்களைக் கவரும் வகையில் படகு சவாரி, பலூன் விளையாட்டுக்கள், ஜம்பிங் கார் மற்றும் வாட்டர் போட் போன்ற விளையாட்டுகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், சாகச விரும்பிகளுக்காக டோரா டோரா ராட்டினம், ஜெயின்ட் வீல், கோஸ்டர் பிரோக்டான்ஸ் மற்றும் கொலம்பஸ் ராட்டினம் எனப் பல்வேறு ராட்சத ராட்டினங்கள் திகைப்பூட்டும் வகையில் இயக்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு மட்டுமின்றி, வணிக ரீதியாகவும் இந்தப் பொருட்காட்சி சிறப்பாகத் திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள், கல்விச் சாதனங்கள் மற்றும் கலைப் பொருட்கள் அடங்கிய 50-க்கும் மேற்பட்ட விற்பனை அங்காடிகள் (Stalls) அமைக்கப்பட்டுள்ளன. உணவுப் பிரியர்களுக்காக மதுரை ஜிகர்தண்டா, மலைத்தேன், சிங்கர் சிப்ஸ், பாப்கார்ன் உள்ளிட்ட விதவிதமான தின்பண்டங்கள் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகத் தூய்மையான முறையில் தயாரிக்கப்படும் மலைத்தேன் மற்றும் சிப்ஸ் வகைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
இந்தப் பொருட்காட்சி தினமும் மாலை 5:00 மணிக்குத் தொடங்கி இரவு 9:30 மணி வரை நடைபெறுகிறது. வரும் ஜனவரி 27-ஆம் தேதி வரை இந்தப் பொருட்காட்சி நீடிக்க உள்ளதால், காரைக்குடி மட்டுமின்றி தேவக்கோட்டை, திருப்புத்தூர் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்துடன் வந்து பொழுதைக் கழிக்கச் சிறந்த இடமாக இது அமைந்துள்ளதால், விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் கூடுதல் பணியாளர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
















