உலகெங்கிலும் பரவி வாழும் தமிழ் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் அறிஞர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் ‘தி ரைஸ் சங்கம் 5’ (The Rise Sangam 5) உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு மதுரை மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 8-ஆம் தேதி அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான உலகத் தமிழர் ஜல்லிக்கட்டு போட்டியுடன் தொடங்கிய இந்த மாநாடு, உலகத் தமிழர்களின் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் முக்கியக் களமாக மாறியுள்ளது. தொடக்க விழாவில் தமிழகப் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி. உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாநாட்டின் இரண்டாம் நாளில், சர்வதேசத் தமிழ் பொறியாளர்கள் அமைப்பின் தலைமையில் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஐ.டி நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்ற ‘பவர் நெட்வொர்க்கிங்’ (Power Networking) சந்திப்புகள் நடைபெற்றன. இதில் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பி2பி (B2B) ஏற்றுமதி-இறக்குமதி வணிகம் குறித்த ஆழமான விவாதங்களும், புதிய தொழில் முனைவோருக்கான ‘பிட்ச் டெக்’ (Pitch Tech) நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மாலையில் நடைபெற்ற கண்கவர் விழாவில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பான உரையாற்றினார். விழாவில் திரைத்துறை மற்றும் இலக்கியத் துறையைச் சேர்ந்த ஆளுமைகளான இயக்குநர் கே.பாக்கியராஜ், ஐசரி கே.கணேஷ், கலைப்புலி எஸ்.தாணு மற்றும் நடிகர்கள் பொன்வண்ணன், வேலா ராமமூர்த்தி, கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவிற்குப் பெருமை சேர்த்தனர்.
இந்த விழாவில் தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த சான்றோர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. இசைக்குயில் பி.சுசீலா அவர்களுக்கு ‘வாழ்நாள் இசைத்தவம்’ விருதும், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மற்றும் தமிழறிஞர் டாக்டர் மகேந்திரன் ஆகியோருக்கு ‘வாழ்நாள் தமிழ்த்தவம்’ விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
திரைத்துறைப் பிரிவில் சிறந்த நடிகராக அருண் விஜய் (வனமகன்), சிறந்த நடிகையாக ஷீலா ராஜ்குமார் (கெவி) மற்றும் சிறந்த இயக்குநராக மகிழ் திருமேனி (விடாமுயற்சி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், விஜி சந்திரசேகர், மைம் கோபி, நிவாஸ் கே.பிரசன்னா உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மக்கள் தொடர்பு அதிகாரி டைமண்ட் பாபுவுக்கு வழங்கப்பட்டது.
மாநாட்டின் முத்தாய்ப்பாக, அமைச்சர்களின் மக்கள் பணியைப் பாராட்டி சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் கே.என்.நேருவுக்கு ‘தன் நகர் வளர்த்த தன்னிகரில்லாதவர்’ விருதும், அமைச்சர் அர.சக்கரபாணிக்கு ‘பசுமை அரசியல் ஆளுமை’ விருதும், அமைச்சர் பி.மூர்த்திக்கு ‘ஜல்லிக்கட்டு காவலர்’ விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மேலும், கீழடி அகழ்வாய்வுப் பணிக்காகத் தங்களது நிலத்தை எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கிய கீழடி மேன்மைகளுக்குச் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. உலகத் தமிழர்களின் எழுச்சியாகக் கருதப்படும் இந்த மாநாடு ஜனவரி 11-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

















