மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட முடுவார்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்னர் சங்கர் திருக்கோவில் தை மாத களரி உற்சவத் திருவிழா கடந்த மூன்று நாட்களாகப் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. தென் மாவட்டங்களில் தை மாதம் பிறந்ததுமே குலதெய்வ மற்றும் கிராமக் காவல் தெய்வங்களுக்குக் களரி எடுத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில், முடுவார்பட்டி பாண்டியன் வகையறா பங்காளிகளால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த உற்சவம், நடப்பாண்டும் பாரம்பரிய முறைப்படி மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
திருவிழாவின் முதல் நாளில், கிராமத்தினர் மற்றும் பூசாரிகள் வக்கீல் ஊத்துக்குச் சென்று புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர், தெய்வங்களுக்குச் சாத்தப்படும் புனிதமான அலங்கார மற்றும் ஆபரணப் பெட்டிகளை மேளதாளங்கள் முழங்கச் சிரமாலையில் சுமந்து கோவிலுக்குக் கொண்டு வந்தனர். தொடர்ந்து, மூலவர் தெய்வங்களுக்குப் பால் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. நாதஸ்வரம் மற்றும் நையாண்டி மேளம் அதிர, அருள் வந்த சாமியாடிகள் ஆக்ரோசமாகச் சாமியாடியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இரண்டாம் நாள் விழாவில், எல்லை தெய்வங்களான தொழுவடி கருப்பசாமி மற்றும் சின்ன கருப்புசாமிக்குச் சர்க்கரைப் பொங்கல் வைத்து விசேஷ பூஜைகள் நடைபெற்றன. கிராமக் காவல் தெய்வங்களை மகிழ்விக்கும் விதமாக நடைபெற்ற இந்த வழிபாட்டில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டின் ஒரு பகுதியாகச் சாமியாடிகள் குறி சொல்லும் நிகழ்வும் நடைபெற்றது.
விழாவின் இறுதி நாளான மூன்றாம் நாள், அதிகாலை முதலே மேளதாளங்கள் முழங்க வழிபாடுகள் தொடங்கின. விழாவின் முக்கிய நிகழ்வாகப் பெரிய கருப்பு சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. அங்கு பிரம்மாண்டமான முறையில் பொங்கல் வைக்கப்பட்டு, ‘சக்தி கிடாய்’ வெட்டும் வைபவம் மிக விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருவிழாவின் நிறைவாக, விழாவிற்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குப் பிரசாதம் மற்றும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. பாண்டியன் வகையறா பங்காளிகள் செய்திருந்த இந்தச் சிறப்பான ஏற்பாடுகள், முடுவார்பட்டி கிராமத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியது.














