கொடைக்கானலில் தாமதமாக உதித்த சூரியன், வெண் முத்துக்களாய் ஜொலிக்கும் பனி!

 சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது நீர்பனிக்காலம் நிலவி வருவதால், அதிகாலை நேரங்களில் ஏற்படும் பனி ஆவியாகி மறையும் கண்கவர் இயற்கை காட்சிகளைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். கொடைக்கானலில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களும் பனிக்காலமாகும். இது முன்பனிக்காலம், நீர்பனிக்காலம், உறைபனிக்காலம் என மூன்று நிலைகளைக் கொண்டது.

இந்த வருடம் வழக்கத்துக்கு மாறாக மழைப்பொழிவு குறைவாக இருந்ததால், கடந்த சில நாட்களாகக் நீர்பனிக்கால நிலையே நிலவி வருகிறது.  இதன் காரணமாக, அதிகாலை வேளையில் வெப்பநிலை 10  (பத்து டிகிரி செல்சியஸுக்கும்) குறைவாகவே உள்ளது.  மலைப்பகுதியில் அடர்த்தியான மேகக் கூட்டங்கள் மற்றும் பனிமூட்டம் காரணமாக, சூரியன் தாமதமாகவே உதித்து வருகிறது.

கீழ்பூமி, ஜிம்கானா, பாம்பார்புரம், நட்சத்திர ஏரி, பியர் சோலா சாலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நீர்பனிக்காலம் நிலவி வருகிறது. அதிகாலை வேளையில் இப்பகுதியைச் சூழ்ந்துள்ள நீர்ப்பனியின் காரணமாகச் செடிகள் மற்றும் புல்வெளிகளில் பனிக்கோர்த்து வெண் முத்துக்கள் போல காட்சியளித்து வருகிறது. நட்சத்திர ஏரியின் மீது படர்ந்திருந்த அடர் பனி ஆவியானது, தாமதமாக உதித்த சூரிய ஒளி அதன் மீது பட்டதும் மெல்ல மெல்லக் கலைந்து ஆவியாகிச் செல்லும் காட்சி பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கிறது. இப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவி வருவதால், காலை வேளையில் நட்சத்திர ஏரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த இயற்கை அழகைக் கண்டு ரசித்து, புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். மலைப்பகுதிகளில் கடும் குளிர் தொடர்ந்து நிலவுவதால், வரக்கூடிய ஒரு சில நாட்களில் வெப்பநிலை மேலும் குறைந்து, உறைபனிக் (Frost) காலம் நிகழ வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version