திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின்போது, கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களை அவமதிக்கும் விதமாக ஒரு மாணவி நடந்துகொண்டது ஏற்புடையதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், அந்த மாணவி மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக சட்டத்தில் வழி உள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தின் பல்கலைக்கழகங்களின் வேந்தரான கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் மாணவ, மாணவியருக்குப் பட்டச் சான்றிதழ்களை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது முனைவர் பட்டம் (Ph.D.) பெறுவதற்காக மேடைக்கு வந்த மாணவி ஜீன் ஜோசப் என்பவர், கவர்னர் ரவி அவர்களிடம் இருந்து பட்டத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்தார். மாறாக, அவர் அருகில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டச் சான்றைக் காட்டிவிட்டு, அங்கிருந்து உடனே கீழே இறங்கிச் சென்றார். அனைவரது முன்னிலையிலும் சபை நாகரிகம் இன்றி அவர் நடந்து கொண்ட இந்தச் செயல், தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சம்பவத்திற்குப் பிறகு மாணவி ஜீன் ஜோசப் அளித்துள்ள விளக்கத்தில், “கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் எதிராகச் செயல்பட்டு வருவதால், அவரிடம் பட்டம் பெற நான் விரும்பவில்லை” என்று தெரிவித்தார். விசாரணையில், இவர் நாகர்கோவில் நகர தி.மு.க. துணைச் செயலாளர் ராஜன் என்பவரது மனைவி என்பதும் தெரியவந்தது. அரசியல் காரணங்களுக்காக இந்தச் செயலை அவர் செய்திருக்கலாம் என்ற கருத்து எழுந்தது.
பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னரிடம் பட்டம் பெற மறுத்து, அவரை அவமதித்த மாணவி ஜீன் ஜோசப்பின் முனைவர் பட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், “மாணவி இவ்வாறு நடந்து கொண்டது ஏற்புடையதல்ல. ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தரை இவ்வாறு அவமதிப்பது முறையல்ல” என்று தெரிவித்தனர். மேலும், இந்தச் சம்பவத்திற்காக மாணவி மீது பல்கலைக்கழகச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஏதேனும் வழிவகை உள்ளதா என்றும், அதுகுறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படியும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர். உயர்கல்வி நிறுவனங்களில் அரசியல் சார்ந்த போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைக் கண்டிக்கும் விதமாக நீதிமன்றத்தின் இந்த கருத்து அமைந்துள்ளது.

















