தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், திமுகவின் தலைமையும் இணைந்து முடிவு செய்யும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை திருவாரூரில் பேட்டி.
திருவாரூர் தனியார் அரங்கில் காங்கிரஸ் கட்சி புதிய மாவட்ட தலைவர் நீலன் அசோகன் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,… தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக தான் இருந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில கல்லூரிகள், விடுதிகள் போன்றவற்றில் சில கயவர்கள் செய்யும் செயல் காரணமாக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசும் ,காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி போல் கனிமொழி எம்பி முகத்தை மூடிக்கொண்டு மாற்று காரில் சென்று எங்களது தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கவில்லை.சிங்க பெண்ணாக நேரில் சென்று சந்தித்துள்ளார். அதன்படி வரும் ஒரு வார காலத்தில் தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்.
மேலும் ஆட்சிஅதிகாரத்தில் பங்கு என்பதை காங்கிரஸின் தலைமையும், திமுகவின் தலைமையும் இணைந்து முடிவு செய்யும். எங்களுக்கான தேவைகளை கேட்டு பெறுவோம். அதற்காக திமுகவிற்கு நெருக்கடிகளை அளிக்க மாட்டோம்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தால் தமிழ் மொழி சிறந்த மொழி, தமிழர்கள் பாரம்பரிய மானவர்கள் என்று பேசுவார். அதே நேரத்தில் பீகாரருக்கு சென்றால் அங்கு தமிழர்கள் மோசமானவர்கள் என்று பேசுவார். தமிழகத்தில் பீகார், ஒரிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் உரிய பாதுகாப்புடன் வசித்து வருகின்றனர்.
அதிமுக – பாஜக கூட்டணி என்பது பொருந்தாத கூட்டணியாகும். தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை குறிப்பிடவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி பின்னர் பாஜக ஆட்சியில் 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்படி உயிர் காக்கும் பொருள்கள், வேளாண்மை பொருட்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பொருட்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் ஜிஎஸ்டி உயர்த்தப்பட்ட நிலையில் இதுபோன்ற ஜிஎஸ்டி வரி தொடர்ந்தால் இந்தியாவில் பணப்புழக்கம் குறையும் என உலக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததன் பேரில் தற்போது குறைத்துள்ளனர். இந்த ஜிஎஸ்டி காரணமாக நாடு முழுவதும் இயங்கி வந்த சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில்உற்பத்தி திறன் அதிகரித்து வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் அதற்கேற்ப அரசுக்கு கடன் கிடைத்து வருகிறது. இதே உத்தரபிரதேச மாநிலம் கடன் கேட்டபோது அதனை வழங்குவதற்கு உலக வங்கி மறுத்துவிட்டது. எனவே தமிழகத்தின் கடன் குறித்து எதிர்க்கட்சிகள் கவலைப்பட தேவையில்லை.
மேலும் திண்டிவனத்தில் சீரமைக்கப்பட்டு வரும் இந்திரா காந்தி பேருந்து நிலையத்தின் பெயரினை மாற்றாமல் பழைய பெயரிலேயே திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் கோரிக்கை வைக்கிறோம் என செல்வபெருந்தகை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்
