ஊட்டி: பொதுவாக குளிர் காலங்களில் அதிகப்படியான பனிமூட்டத்துடனும் குளிருடனும் காணப்படும் நீலகிரி மாவட்டத்தில், தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், உடலைக் குளிர்ச்சியூட்டும் ‘நுங்கு’ மற்றும் ‘பதநீர்’ விற்பனை சூடுபிடித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இம்முறை தென்மேற்குப் பருவமழை மிகத் தீவிரமாகப் பெய்து கொட்டித் தீர்த்தது. இதைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழையும் கடந்த இரு மாதங்களாகப் பதிவாகியது. ஆனால், தற்போது ஊட்டியில் காலநிலை மாறி மாறி வருகிறது. பகல் நேரங்களில் அதிகப்படியான வெயில் சுட்டெரிக்கிறது. அதே சமயம், திடீர் மேகமூட்டம் மற்றும் மிதமான பனியும் அவ்வப்போது நிலவுகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இதற்கு நேர்மாறாக, இரவு நேரங்களில் குளிரின் அளவு வழக்கத்தைவிட அதிகரித்துக் காணப்படுகிறது.
பகல் நேரத்தில் திடீரென அதிகரிக்கும் இந்த வெப்பம் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வழி தேடி வருகின்றனர். இதனால், ஊட்டியில் உள்ள குளிர் பானக் கடைகள் மற்றும் ஐஸ்கிரீம் கடைகளில் அதிகளவிலான கூட்டம் காணப்படுகிறது. அத்துடன், சாலையோரங்களில் புதிதாக ‘நுங்கு’ விற்பனையும் களைகட்டத் தொடங்கியுள்ளது.
உள்ளூர் மக்களுக்குக் கோடைக்கால குளிர்ச்சியூட்டியாக விளங்கும் நுங்கு, தற்போது பொள்ளாச்சி மற்றும் சமவெளிப் பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. ஊட்டி நகரம் மட்டுமின்றி, மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாலையோரங்களில் நுங்கு மற்றும் பதநீர் விற்பனை செய்யப்படுகிறது. வெப்பத்தால் வாடும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் இதனை வாங்கி உண்டு மகிழ்கின்றனர்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக, குளிர்பிரதேசமான ஊட்டியில் கூட, வெப்பத்தைத் தணிக்கும் நுங்கின் விற்பனை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.

















