திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில், புராணப் பெருமை வாய்ந்த கந்தன்குடி கிராமத்தில் வீற்றுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பூசப் பெருவிழா இன்று பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்களை வதம் செய்வதற்காக அன்னை பராசக்தி காளி தேவியாக உருவெடுத்துப் போர்க்களம் புகுந்தபோது, அவளுடன் வந்த குழந்தை (கந்தன்) இங்கு தங்கி இளைப்பாறியதாகப் புராணங்கள் கூறுகின்றன. கந்தன் தங்கிய குடி என்பதால் ‘கந்தன்குடி’ எனப் பெயர் பெற்ற இந்தத் தலம், வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் சக்தி வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில், இந்த ஆண்டு தைப்பூசத் திருநாளை முன்னிட்டுச் சுப்பிரமணியர், வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவினை முன்னிட்டு அதிகாலை முதலே மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு 1008 பால் குடங்கள், மஞ்சள், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகத் திரவியங்களால் மகா அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முருகப்பெருமான் வெள்ளி கவச அலங்காரத்தில் கம்பீரமாகக் காட்சி அளித்தார். மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற மகா தீபாராதனையைக் கண்ட பக்தர்கள், “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என முழக்கமிட்டு வழிபட்டனர். இந்தத் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கந்தன்குடி கிராம மக்கள் மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்தனர்.
பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்றபடி பக்தர்கள் பல மணிநேரம் பொறுமையாகக் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காகக் கோவில் நிர்வாகத்தின் சார்பில் நீண்ட வரிசையில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, குடிநீர் மற்றும் நிழற்பந்தல் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுப் போக்குவரத்தைச் சீர்செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த போதிலும், எவ்வித அசம்பாவிதமும் இன்றித் திட்டமிட்டபடி தரிசனம் நடைபெற்றது, கந்தன்குடி பகுதியில் பெரும் ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

















