கோவை மாவட்டம் சின்னதடாகம் மற்றும் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ‘வேட்டையன்’ என்று பெயரிடப்பட்டுள்ள ஒற்றைக் காட்டு யானை தொடர்ந்து ஊடுருவி விவசாயிகளையும், பொதுமக்களையும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வந்த இந்த யானை, தற்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளைச் சேதப்படுத்தும் செயலில் இறங்கியுள்ளது. நேற்று துடியலூர் அருகே உள்ள பன்னீர்மடை கிராமத்தில் விவசாயி ஆனந்தகுமார் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த ‘வேட்டையன்’, வீட்டின் முன்பக்கக் கதவைத் தனது பலத்தால் தள்ளித் திறந்து உள்ளே புகுந்தது. வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் பருப்பு மூட்டைகளை வெளியே இழுத்துப் போட்டுச் சேதப்படுத்திய அந்த யானை, அங்கிருந்த சர்க்கரை டப்பாவை மட்டும் தனியாக எடுத்துச் சென்று, அதனைச் சுவைத்தபடியே சாலையோரம் நடந்து சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு யானையை மலையடிவாரத்தை நோக்கி விரட்டினர். இருப்பினும், சிறிது நேரத்திலேயே தாளியூர் பகுதிக்குச் சென்ற அதே யானை, விவசாயி வேலுச்சாமி என்பவரது வீட்டின் இரும்பு கேட்டை வளைத்து உடைத்து உள்ளே நுழைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த கால்நடைத் தீவனங்களைச் சிதறடித்துச் சேதப்படுத்தியது. இவ்வாறாக ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குத் தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் ‘வேட்டையன்’, பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. குறிப்பாக, உணவைத் தேடி மனிதக் குடியிருப்புகளுக்குள் நுழையும் யானையின் இந்தப் பழக்கம், எதிர்காலத்தில் மனித-விலங்கு மோதலைத் தீவிரமாக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
வனத்துறையினர் அவ்வப்போது யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டாலும், அது மீண்டும் மீண்டும் ஊருக்குள்ளேயே திரும்புவதால் நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. “யானையை வெறும் விரட்டுவது மட்டும் தீர்வாகாது; தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ‘வேட்டையன்’ யானையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது கும்கி யானைகளின் உதவியுடன் அதன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்” எனத் தடாகம் பகுதி விவசாயிகள் ஒருமித்தக் கோரிக்கை விடுத்துள்ளனர். விளைநிலங்கள் சேதமடைவது ஒருபுறம் இருக்க, தற்போது வீடுகளுக்குள்ளேயே யானை புகுவதால் இரவு நேரங்களில் தூக்கமின்றித் தவிப்பதாகக் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
















