தமிழக காவல்துறை அமைப்பு முற்றிலும் தடம்புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது என முன்னாள் போலீஸ் ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட பின்னர், நிருபர்களிடம் பேசிய அவர், காவல்துறையின் தற்போதைய செயல்பாடுகள் மிகுந்த அக்கறையுடன் கவலையை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
“கடந்த ஆட்சியில் சாத்தான்குளம் என்கிற இடத்தில் அப்பா, மகன் இருவரையும் காவல்துறை கொன்றது. தற்போது திருப்புவனத்தில் அஜித்குமார் மரண வழக்கிலும் அதே போன்று முறைகேடு நடக்கிறது. ஆனால், இதற்கெதிராக அரசியல் தலைவர்கள் எவரும் பதவியை விட்டு விலகுவேன் என சொல்வதில்லை. ஊடகங்களும் அவர்களிடம் அந்தக் கேள்வியை கேட்பதில்லை,” என அவர் குற்றம் சாட்டினார்.
போலீசாரின் அணுகுமுறை குறித்து மேலும் பேசும் அவர், “எஸ்பி, டிஐஜி, ஐ.ஜி, டிஜிபி என உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் ‘பொம்மை’ போல செயல்படுகிறார்கள். யாரும் விசாரணையை நேர்மையாக மேற்கொள்வதில்லை. நீதிமன்றத் தகவலின்றி நடைபெறும் சிஎஸ்ஆர் விசாரணைகள் முற்றிலும் சட்டவிரோதமானவை. இந்த சிஎஸ்ஆரை அடிப்படையாகக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர்கள் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர்” என்றார்.
தான் பெற்றுவரும் ரூ.95,000 மாத பென்ஷனை தானாகவே கையளிக்கத் தயாராக இருப்பதாகவும், ஒரு போலீஸ் அதிகாரி கூட தூக்கு அல்லது ஆயுள் தண்டனை அளிக்கக்கூடிய வழக்குகளில் குற்றப்பத்திரிகையில் கையெழுத்து போட்டிருக்க முடியாது என்பதை நிரூபிக்கக் கூடியவரை காண விரும்புவதாகவும் அவர் சவால் விட்டார்.
தற்போதைய காவல் துறை அதிகாரிகள் பலரும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், “ஸ்பெஷல் பார்ட்டி” அமைப்பு, மக்களை மிரட்டும் வன்முறைக்கான கருவியாக உருவாக்கப்பட்டதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.
“நான் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் பொறுப்பேற்கிறேன்” என்று வலியுறுத்திய அவர், சட்டத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.