திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சிப் பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் புதிய சமுதாயக் கூடத் திறப்பு விழா திண்டுக்கல்லில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சி 24-வது வார்டு முத்தழகுபட்டி செபஸ்தியார் கோவில் முன்புறம் ரூ. 13.50 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூட மேற்கூரை அமைக்கும் பணி, முத்தழகுபட்டி இணைப்புச் சாலையிலிருந்து பள்ளபட்டி மெயின் ரோடு வரை ரூ. 83.50 லட்சம் மதிப்பீட்டிலான சாலைப்பணி மற்றும் செட்டிநாயக்கன்பட்டி அறிவுத் திருக்கோயில் அருகே ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை அவர் முறைப்படி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, செட்டிநாயக்கன்பட்டி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, தொகுதி நிதியிலிருந்து ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட புதிய சமுதாயக் கூடத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி அவர் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவிற்குப் பின் மக்கள் மத்தியில் உரையாற்றிய திண்டுக்கல் சி. சீனிவாசன், அதிமுக ஆட்சிக் காலத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்குத் தடையற்ற எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். கடந்த 15 ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோது முடங்கிக் கிடந்த திண்டுக்கல் தொகுதி, தான் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னரே அசுர வளர்ச்சி கண்டதாகக் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் வந்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, விவசாயிகள் நலனில் தனி அக்கறை கொண்டு நீர்நிலைகளைத் தூர்வாரி வண்டல் மண்ணை இலவசமாக வழங்கியவர் என்று புகழாரம் சூட்டினார். தமிழகத்தில் நற்பணிகள் தொடரவும், ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மக்களைச் சென்றடையவும் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் உண்மையான வழித்தோன்றலாக விளங்கும் எடப்பாடியாருக்கு மக்கள் மீண்டும் பேராதரவு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவில், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சி.எஸ். ராஜமோகன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராஜசேகர், தர்மராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் திண்டுக்கல் மாநகர பகுதி செயலாளர்கள் ராஜன், சேசு, முரளி, மாவட்ட மாணவரணி செயலாளர் தனஞ்செயன், முன்னாள் கவுன்சிலர் ஜான் பீட்டர், நகர மேற்கு பகுதி மகளிர் அணி செயலாளர் ஜோஸ்பின் ஜெசிந்தா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
