“வெளிநடப்பு நேரத்திலும் சிரித்துக்கொண்டே செல்பவர் நயினார் !” – சட்டமன்றத்தில் ஸ்டாலின் பாராட்டு

சென்னை :
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற அவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக வாழ்த்து தெரிவித்தார். “வெளிநடப்பு செய்யும் போதும் சிரித்துக்கொண்டே செல்பவர்; கோபம் கொள்ளவே மாட்டார்” என்று அவர் பாராட்டியபோது, அவையில் லேசான சிரிப்பலை எழுந்தது.

நயினார் நாகேந்திரன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, பல்வேறு கட்சித் தலைவர்கள் அவருக்கு சமூக வலைதளங்களிலும் நேரிலும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் தனது எக்ஸ் தளப் பதிவில்,

“பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற்று மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட இறைவனை வேண்டுகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

அவர் சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரனை நேரிலும் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

அதன்பின் பேசுகையில் முதல்வர் ஸ்டாலின், “நயினார் நாகேந்திரன் கட்சி பாகுபாடு இன்றி பழகக்கூடியவர். யாரையும் கோபம் கொள்ள வைப்பதில்லையென்றே சொல்லலாம். வெளிநடப்பிலும் கூட சிரித்துக்கொண்டே செல்வார் — இதுதான் அவரின் தன்மை,” என்று கூறினார்.

நயினார் நாகேந்திரன் அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் தொடங்கி, 2001-ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

பின்னர் 2017-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், தற்போது கட்சியின் மாநிலத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

Exit mobile version