திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தேவராயம்பாளையம் முதல் காடம்பாடி வரை செல்லும் சாலை, சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், இந்தச் சாலைப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், அரசு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். வழக்கமாக ஒரு சாலையைப் புதுப்பிக்கும்போது, பழைய தார்ச் சாலையை ‘ஸ்கிராப்பிங்’ (Scrapping) முறையில் அகற்றிய பின்னரே புதிய சாலை அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் அரசாணையாகும். ஆனால், இங்கு பழைய சாலையை அகற்றாமலேயே அதன் மேல் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “சாலைப் பணிகள் தொடங்குவதற்கு முன்னரே, பழைய சாலையைத் தோண்டி எடுத்துவிட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். ஆனால், மக்களின் கோரிக்கையைச் செவிமடுக்காத ஒப்பந்ததாரர், எவ்வித முன்னறிவிப்புமின்றி இரவோடு இரவாகப் பழைய சாலையின் மேலேயே புதிய தார்ச் சாலையை அமைத்துள்ளார். இதனால் சாலையின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் சாலை வழிந்தோடும் நீர், இயற்கையாகப் பள்ளமான பகுதிகளுக்குச் செல்லாமல், தாழ்வாக உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய வந்த ஊரக வளர்ச்சித் துறைப் பொறியாளர்களிடம் முறையிட்டோம்,” எனத் தெரிவித்தனர்.
மக்களின் நியாயமான புகாருக்குப் பதில் அளித்த பொறியாளர்கள், “சாலையைத் தோண்டுவதற்குத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. திட்டமிட்டபடிதான் பணிகள் நடக்கும்; சாலை மட்டம் உயர்ந்துவிட்டது என வருத்தப்பட்டால், நீங்கள் வேண்டுமானால் உங்கள் வீட்டை உயர்த்திப் பிடித்துக் கொள்ளுங்கள்,” என மிக அலட்சியமாகவும், பொறுப்பற்ற முறையிலும் பதில் அளித்துள்ளனர். ஒரு அரசு அதிகாரி, மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் உள்ள குறைகளைச் சரி செய்யாமல், வீட்டை உயர்த்திக் கட்டுங்கள் எனக் கூறியது பொதுமக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (BDO) விரிவான புகார் அளிக்கப் போவதாகவும், முறையற்ற இந்தச் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும் இச்சிப்பட்டி ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















