விழுப்புரத்தில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் நகராட்சி பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்ற படவில்லை, 4 மாதத்திற்கு ஒருமுறைதான் கூட்டம் நடத்துவதாக கூறி நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகர மன்ற கூட்டம் இன்று நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு தலைமையில் நடைபெற்றது.
நகர மன்ற கூட்டத்தில் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டில் உள்ள கோரிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பி பேசியபோது தி.மு.க. கவுன்சிலர் மணவாளன் எழுந்துநின்று ஒவ்வொருவராக கேள்வி கேளுங்கள் என்றபோது, நாங்கள், தலைவரிடம் பேசுகிறோம், நீங்கள் எதற்காக தலையிடுகிறீர்கள் என்று கேட்டனர். இதனால் இரு கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நகர மன்ற உறுப்ப்பினர்கள் ராதிகா செந்தில், கோல்டுசேகர், ஜெயப்பிரியாசக்திவேல், ஆவின்செல்வம், கலை, பத்மாவதி ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, நகரமன்ற கூடத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விழுப்புரம் நகராட்சி பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்ற படவில்லை, 4 மாதத்திற்கு ஒருமுறைதான் கூட்டம் நடத்துகின்றனர். இதனால் மக்கள் பிரச்சினைகளை எடுத்துரைக்க முடிவதில்லை.
நகர மக்கள் அனைவரும் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இன்றி சிரமத்திற்குள்ளாகி உள்ளதாக கோஷம் எழுப்பினர். மேலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவேற்றப்படவில்லை சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொடர் விபத்துகள் நடைபெறுவதால் அதனை பிடிக்க நடவடிக்கை இல்லை என்றும் நகர் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சாலைப்பணிகள் நடைபெறவில்லை. மழைநீர் வடிகால் வாய்க்கால் வசதியும் இல்லை, மக்கள் பிரச்சினைகளை சொல்ல விடாமல் தி.மு.க. கவுன்சிலர்கள் தங்களை தடுத்து அவர்களே பேசுவதால் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர்.
