அந்தியூர் தொகுதியில் புதிய தார் சாலைப் பணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசின் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ் புதிய சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பொலவக்காளிபாளையம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்திரா நகர் முதல் கங்கம்பாளையம் வரையிலான இந்தப் பகுதியில், சுமார் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தர தார் சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நேற்று முறைப்படி தொடங்கப்பட்டன.

இந்தத் திட்டத்திற்கான பூமிபூஜை மற்றும் தொடக்க விழா பொலவக்காளிபாளையம் ஊராட்சியில் நடைபெற்றது. இதில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் அவர்கள் கலந்துகொண்டு, செங்கற்களுக்குப் பூசை செய்து, பணிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், விவசாய விளைபொருட்களைச் சந்தைக்கு எளிதாகக் கொண்டு செல்லவும் இந்தச் சாலைப் பணி பெரும் உதவியாக இருக்கும். தரமான முறையில், குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தப் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கோபி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோரக்காட்டூர் ரவீந்திரன், ஈரோடு வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேணுகாதேவி மற்றும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், கோபி வடக்கு ஒன்றிய ஓட்டுனர் அணி அமைப்பாளர் செந்தில், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊராட்சித் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

கடந்த சில ஆண்டுகளாகப் பழுதடைந்து காணப்பட்ட இந்தச் சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்ததற்காக, அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கும், தமிழக அரசுக்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். தொகுதி முழுவதும் இது போன்ற இணைப்புச் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தொகுதி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version