திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் நீண்ட காலத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, துறையூர் நகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட காமாட்சியம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எளிதில் அத்தியாவசியப் பொருட்களைப் பெறும் வகையில் அமைக்கப்பட்ட புதிய நியாயவிலைக் கடையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி வழங்கப்பட்டு வரும் தமிழர்களின் கலாச்சாரப் பண்டிகையான பொங்கல் திருவிழாவிற்கான சிறப்புத் தொகுப்பினை அவர் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்தத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, புடவை மற்றும் வேட்டி ஆகியவற்றுடன், குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ரொக்கப்பணம் ரூ. 3000 ஆகியவற்றைப் பயாளிகளுக்கு வழங்கி ஸ்டாலின் குமார் எம்எல்ஏ விழாவைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் துறையூர் நகர்மன்றத் தலைவர் செல்வராணி மலர்மன்னன், துணைத்தலைவர் மெடிக்கல் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், கார்த்திகேயன், இளையராஜா, ஜானகிராமன், பாஸ்கர், சுதாகர், அம்மன்பாபு மற்றும் நகர்மன்ற நியமன உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிர்வாகத் தரப்பில் துறையூர் வட்டாட்சியர் சிவகுமார், கூட்டுறவு துணை சார் பதிவாளர் பானுமதி மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்று, விநியோகப் பணிகளை முறைப்படுத்தினர். தொகுதி மக்களின் வசதிக்காகத் திறக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கடையானது, அப்பகுதி மக்கள் வெகுதூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கும் சிரமத்தைக் குறைக்கும் என்றும், தடையின்றி பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யும் என்றும் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தெரிவித்தார். கட்சி நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி மதியழகன், கிளைச் செயலாளர்கள் மோகன், நல்லுசாமி, சசிகுமார் மற்றும் வர்த்தக அணி திருமூர்த்தி உட்பட ஏராளமான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த உற்சாகமான தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
















