தூங்கா நகரமான மதுரையில் நீண்டகாலமாகப் பெரும் சவாலாக இருந்து வரும் போஸ்டர் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தவும், நகரின் அழகைப் பாதுகாக்கவும் மதுரை மாநகராட்சி தற்போது ஒரு அதிரடியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது. நகரின் முக்கிய சாலைகள், அரசு பொதுச் சுவர்கள் மற்றும் பூங்கா சுவர்களில் அரசியல் கட்சியினர், சாதி அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வரைமுறையின்றி போஸ்டர்களை ஒட்டி பொது இடங்களை அசுத்தப்படுத்தி வந்தனர். மாநகராட்சி சார்பில் அபராதம் மற்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இந்த போஸ்டர் கலாச்சாரம் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் சித்ரா அவர்களின் உத்தரவின் பேரில், போஸ்டர்களால் பாழான சுவர்களை மீட்டு, அவற்றை விழிப்புணர்வு ஓவியங்களால் அழகுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வைகை ஆற்றின் வடகரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ‘தமிழ் வைகை பூங்கா’ சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் முழுமையாக அகற்றினர். பின்னர் அந்தச் சுவர்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, அவற்றில் உலகப் பொதுமறையான திருக்குறளை வலியுறுத்தும் வகையில் திருவள்ளுவர் ஓவியங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு வாசகங்கள் வரையப்பட்டுள்ளன. வெறும் சுவர்களாக இருந்த இடங்கள் தற்போது வண்ணமயமான ஓவியங்களால் கலைக்கூடமாக மாற்றப்பட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்தப் மாற்றத்தைக் கண்டு ரசிக்கின்றனர்.
மாநகராட்சி ஆணையரின் இந்தச் சிறப்பான முயற்சிக்கு மதுரை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சுவர்களில் வர்ணம் பூசப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளதால், இனி வருங்காலங்களில் சமூக விரோதிகள் மற்றும் விளம்பரதாரர்கள் மீண்டும் அங்கு போஸ்டர் ஒட்டத் தயங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. “நகரை அழகாக்குவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதனைப் பராமரிப்பது” என்று தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இவ்வளவு கஷ்டப்பட்டு வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மீது மீண்டும் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாநகரின் அனைத்து முக்கியச் சுவர்களையும் இதுபோன்று விழிப்புணர்வு ஓவியங்களால் அலங்கரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













