தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மதுரை தெற்குத் தொகுதியைக் கைப்பற்றுவதில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்குள் கடும் போட்டி எழுந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது, தற்போது அக்கூட்டணிக்குள் ஒரு பெரிய ‘பஞ்சாயத்தையே’ கிளப்பியுள்ளது. இத்தொகுதியின் வெற்றி உறுதி என இரு தரப்புமே கணித்துள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மற்றும் கூட்டணிக் குளறுபடிகள் மதுரை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மதுரை தெற்குத் தொகுதியைப் பொறுத்தவரை முக்குலத்தோர் மற்றும் சௌராஷ்டிரா சமூக மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. குறிப்பாக, சௌராஷ்டிரா சமூகத்தினர் இடையே பாஜகவிற்கான ஆதரவு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற சௌராஷ்டிரா சமூக அரசியல் எழுச்சி மாநாட்டில், தங்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சிக்கே ஆதரவு என அறிவிக்கப்பட்டது பாஜகவினருக்குச் சாதகமாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, பாஜக தரப்பில் மாநில நிர்வாகிகளான ராம சீனிவாசன் மற்றும் மகாலட்சுமி ஆகிய இருவரும் இத்தொகுதியைக் கைப்பற்றத் தீவிரமாகப் போட்டி போட்டு வருகின்றனர். நீண்ட காலமாகக் களம் கண்டு வரும் ராம சீனிவாசன் ஒருபுறம் காய் நகர்த்த, சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த மகாலட்சுமியும் டெல்லி தலைமை வரை அழுத்தம் கொடுத்து வருகிறார்.
அதேவேளையில், அதிமுகவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தீவிர ஆதரவாளரான சரவணனுக்குத் தொகுதிக்குள் செல்வாக்கு இருந்தாலும், அதிமுகவின் மற்றொரு முக்கியத் தலைவரான செல்லூர் ராஜூ இவருக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சரவணனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, இத்தொகுதியை பாஜக வசமே தள்ளிவிடச் செல்லூர் ராஜூ ரகசியமாகக் காய் நகர்த்தி வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஆர்.பி. உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆதரவாளர்களிடையே மறைமுக மோதலை உருவாக்கியுள்ளது.
கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஒருவேளை இத்தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டால், அங்குள்ள அதிமுக நிர்வாகிகள் முழு மனதுடன் பணியாற்றுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதிமுக வேட்பாளர் நின்றால் எளிதாக வெல்லக்கூடிய தொகுதியில், பாஜக வேட்பாளருக்காகப் பணியாற்றுவது தங்கள் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என உள்ளூர் அதிமுகவினர் கருதுகின்றனர். இத்தகைய சூழலில், எதிர்க்கட்சியான திமுகவினர் இந்த உட்கூசல் தங்களுக்குச் சாதகமாக முடியும் என உற்சாகமடைந்துள்ளனர். வேட்பாளர் தேர்வில் நிலவும் இந்தத் திணறல், தேர்தல் நேரத்தில் அதிமுக – பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா அல்லது சுமூகமாகத் தீர்க்கப்படுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
















