உலக பல் மருத்துவ அரங்கில் தமிழருக்குக் கிடைத்த உச்சகட்ட கௌரவம்: சர்வதேச டாக்டர்கள் கல்லூரியின் (ICD) தலைவராக டாக்டர் எஸ்.எம்.பாலாஜி தேர்வு!

சென்னை பாலாஜி பல் மற்றும் முகச் சீரமைப்பு மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும், உலகப்புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் டாக்டர் எஸ்.எம். பாலாஜி, சர்வதேச பல் மருத்துவக் கல்லூரியின் (International College of Dentists – ICD) 100-வது ஆண்டு பட்டமளிப்பு மற்றும் விருது வழங்கும் விழாவில், அதன் முக்கியப் பிரிவான பிரிவு-6-ன் (இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம்) தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இந்திர பிரஸ்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நியமன விழாவில், சர்வதேச பல் டாக்டர்கள் கல்லூரியின் சர்வதேசத் தலைவர் டாக்டர் ஜூலியோ ரோட்ரிக்ஸ், தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர் டாக்டர் திகம்பர் பெஹெரா மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர் கேவல் கிஷன் தல்வார் ஆகியோர் முன்னிலையில் டாக்டர் பாலாஜி இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். புதுடெல்லி குரு கோபிந்த் சிங் மற்றும் இந்திர பிரஸ்தா பல்கலைக்கழக துணைவேந்தர் மகேஷ் வர்மா உள்ளிட்ட மருத்துவத் துறையின் ஜித்திக்கள் முன்னிலையில், முன்னாள் தலைவர் டாக்டர் விரீந்தர் சிங்கிடம் இருந்து முறைப்படி தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்டார்.

ஒரு நூற்றாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட சர்வதேச பல் மருத்துவக் கல்லூரி, உலகளவில் மனிதகுலத்திற்கான மருத்துவச் சிறப்பு, அறநெறிகள் மற்றும் சேவையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இயங்கி வரும் மிகவும் மதிப்புமிக்க அமைப்பாகும். இதன் பிரிவு-6-ன் தலைவர் பதவி என்பது பிராந்திய தலைமைத்துவத்தில் மிக உயர்ந்த கௌரவமாகக் கருதப்படுகிறது. பல நாடுகளில் தனது சிக்கலான அறுவை சிகிச்சை பங்களிப்புகள் மற்றும் தன்னலமற்ற மனிதாபிமான சேவைகளுக்காக ஏற்கனவே சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள டாக்டர் பாலாஜி, தற்போது இப்பதவியில் அமர்வது இந்தியாவிற்கும் குறிப்பாகத் தமிழகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். இவரது தலைமையின் கீழ், ஐ.சி.டி பிரிவு-6-ன் அடுத்த மாநாடு சென்னையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தெற்காசிய பிராந்தியத்தில் பல் மருத்துவத் துறையின் சர்வதேசத் தொழில்முறைப் பரிமாற்றத்தையும், நவீன கல்விச் சிறப்பையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட அறுவை சிகிச்சை பராமரிப்பு மற்றும் உலகளாவிய மருத்துவ ஒத்துழைப்பிற்கான டாக்டர் பாலாஜியின் அர்ப்பணிப்பு, இந்தப் புதிய பொறுப்பின் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

Exit mobile version