தமிழ்நாடு குறித்து தொடர்ச்சியாக தவறான மற்றும் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு வருவதாக மாநில ஆளுநர் ஆர்.என். ரவியை அமைச்சர் எஸ். ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரின் அண்மை கருத்துகள் தமிழ்நாட்டை குறைசொல்லும் விதமாக உள்ளதாகவும், அவதூறு பரப்பும் நோக்கத்துடனே செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்
“தமிழ்நாடு தனித்து நிற்கிறது, யாருடனும் இணையவில்லை என்று ஆளுநர் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. இந்திய அரசியலமைப்பு பல மொழிகளும் பல மாநிலங்களும் இணைந்து இயங்கும் அமைப்பு. அதற்கே எதிரான வகையில் ஆளுநர் கருத்து வெளியிடுவது கவலைக்குரியது,” என்றார்.
“திராவிடம் என்பது கற்பனை” என்ற ஆளுநரின் கருத்தைவும் அமைச்சர் ரகுபதி கண்டித்தார். இந்திய தேசிய கீதத்திலேயே ‘திராவிடம்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது என்பதை ஆளுநர் அறியாமலோ அல்லது புரிந்துகொள்ளாமலோ கூறியிருக்கலாம் என்று அவர் கிண்டலாக கூறினார்.
அதே நேரத்தில், பிகாரிகளின் பாதுகாப்பு, மொழிச் சிறுபான்மையினர் மீதான அணுகுமுறை போன்ற விஷயங்களில் ஆளுநர் முன்வைத்த கருத்துகளும் முழுக்க ஆதாரமற்றவை என அவர் குறிப்பிட்டார். “தமிழ்நாட்டில் பிகாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள்’ போன்ற பழைய அரசியல் பிரச்சாரங்களையே மீண்டும் மீண்டும் கூறுவது ஏன்?” என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
மீனவர்கள் பிரச்சனை குறித்தும் ஆளுநரின் குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்தார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும் மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது; ஆனால் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசே மவுனமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “நாம் பல்வேறு மாநில முதல்வர்கள், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பலரை தமிழ்நாட்டின் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து நடத்தி வருகிறோம். இதன் மூலம் நாங்கள் இந்திய கூட்டாட்சியின் ஒரு அங்கமாகவே செயல்படுகிறோம் என்பதும் தெளிவாகிறது,” என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
















