தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான ஓய்வூதிய விவகாரத்தில், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” குறித்த அரசாணை அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடெரிக் ஏங்கெல்ஸ் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், 2003 ஏப்ரல் 1-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு அமல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், முறையான விதிமுறைகள் வகுக்கப்படாததால் ஓய்வுபெறும் ஊழியர்கள் பலன்களைப் பெற முடியாமல் தவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தி பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி, தமிழக அரசு தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்களை உள்ளடக்கிய “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை” (Tamil Nadu Assured Pension Scheme) அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார். இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அரசாணை இன்னும் 2 வார காலத்திற்குள் முறைப்படி வெளியிடப்படும் என்பதால், இந்த மனுவின் மீதான விசாரணை இனி தேவையில்லை என அவர் வாதிட்டார்.
அரசு தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் வழக்கை முடித்து வைக்கலாமா என வினவினர். ஆனால், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு அரசாணை வெளியிடும் வரை வழக்கை நிலுவையில் வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசாணை குறித்த முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்த லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த விவகாரத்தில், அரசு வெளியிடப்போகும் அந்த அரசாணை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான பலன்களைத் தருமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசு ஊழியர் சங்கங்களிடையே அதிகரித்துள்ளது.

















