கடுவங்குடி ஊராட்சியில் இடப்பிரச்னையில் வீடுபுகுந்து சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து தாக்கி, வீட்டை சேதப்படுத்தியதாக புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கடுவங்குடி ஊராட்சி பனையக்குடி கிராமத்தில் கண்ணன் என்பவரின் குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இவரது அனுபவத்தில் உள்ள இடத்தின் ஒரு பகுதியை கோயில் கட்டுவதற்காக கேட்டுள்ளனர். அதனை தருவதற்கு கண்ணன் குடும்பத்தினர் ஒப்புக்கொண்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொன்னையன் என்பவரின் தூண்டுதலில் அந்த இடத்தை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்ய சிலர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரியத்துறையினர் அந்த இடத்தில் கண்ணன் குடும்பத்தினர் வீடு கட்டியுள்ளதிலும், மின் இணைப்பு பெற்றுள்ளதிலும் சட்டசிக்கல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர். இருப்பினும் இருதரப்பினரிடையே இந்த பிரச்னை நீடித்துவந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி கண்ணனின் 14 வயது மகள் நிவிகா மட்டும் தனியாக வீட்டில் இருந்தபோது, அங்கு சென்ற பொன்னையன், மகா, மகாவின் கணவர் கண்ணன், திலகா, திலகாவின் கணவர் பாஸ்கர், சித்ரா, சித்ராவின் கணவர் கணேசமூர்த்தி, சீத்தா, சீத்தாவின் கணவர் ரவீந்திரன், ரூபா, ரூபாவின் கணவர் சங்கர் ஆகியோர் நிவிகாவை தாக்கி, அவரது உடையை கிழித்து பாலியல் ரீதியாக தீண்டி காயப்படுத்தி ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும், கண்ணனின் வீட்டு தோட்டத்தில் இருந்த சுமார் 20 தென்னை மரங்கள் அனைத்து மரங்களையும் பொக்லைன் இயந்திரம் கொண்டு பிடுங்கி எறிந்ததுடன், அவர் வீட்டில் இருந்த போர்வெல் மற்றும் பாத்ரூம் ஆகியவற்றையும் இடித்து சேதப்படுத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த நிவிகா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார். இதுகுறித்து, மணல்மேடு காவல் நிலையத்தில் கண்ணன் குடும்பத்தினர் புகார் அளித்து 10 நாட்களைக் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி கண்ணன் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி ஸ்டாலினிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து, நிவிகா அளித்த புகாரில், தன்னை தாக்கி, ஆபாசமாக பேசி, அவமானப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
















