ராஜஸ்தான் மாநிலத்தின் சம்பல் ஆற்று கரையில் அமைந்துள்ள கோட்டா நகரம், இந்தியாவில் போக்குவரத்து சிக்னல் எதுவுமின்றி இயங்கும் முதல் நகரமாக புதிய சாதனையைப் படைத்துள்ளது. உலகளவில் இத்தகைய முறை நடைமுறைக்கு வந்த நகரங்களில், பூட்டானின் தலைநகர் திம்புவிற்கு அடுத்ததாக இடம்பிடித்துள்ளது கோட்டா.
நகரின் போக்குவரத்து அமைப்பை முழுமையாக மாற்றும் பணிகளை கோட்டா நகர்ப்புற மேம்பாட்டு அறக்கட்டளை மேற்கொண்டது. ஒரு சிக்னலும் இல்லாமல் வாகனங்கள் நின்று விடாமல் தொடர்ச்சியாக நகர முடியும்படி திட்டமிடப்பட்ட ரோடு அமைப்புகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதற்காக நகரின் பல முக்கிய சந்திப்புகள் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் மூலமாக மாற்றப்பட்டன. மொத்தம் இரண்டு டஜனைத் தாண்டும் இந்த மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் காரணமாக, நகரின் பெரும்பாலான போக்குவரத்து சீரான ஓட்டத்துடன் இயங்குகிறது. மேலும், பல பகுதிகளை இணைக்கும் ரிங் ரோடுகள், சந்திப்புகளில் குவியும் நெரிசலைக் குறைத்துள்ளன.
இந்த மாற்றங்களால் கோட்டாவில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு மட்டுமல்லாமல், விபத்து எண்ணிக்கைவும் குறையும் என அதிகாரிகள் நம்புகின்றனர். சிக்னலில் நின்று காத்திருக்கும் நிலை இல்லாததால் எரிபொருள் சேமிப்பும் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் இந்தியாவின் பல நகரங்களுக்கு, நவீன நகரமைப்பின் உதாரணமாக கோட்டா தற்போது மாறியுள்ளது.
















