திருப்பரங்குன்றம் மலை மற்றும் அங்குள்ள கோயில் விவகாரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘கந்தன் மலை’ திரைப்படம், திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகாததால் ‘தாமரை’ என்ற யூடியூப் தளத்தில் வெளியாகிறது. பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா இப்படத்தின் மூலம் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். முறுக்கிய மீசையுடன், ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக கம்பீரமான வேடத்தில் அவர் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சேரன்ராஜ் நடித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், நாடக காதல் போன்ற சமகால சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கொண்டு கதை நகர்கிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வரும் சட்டப் போராட்டங்கள் மற்றும் பக்தர்களின் உணர்வுகளையும் இப்படம் பிரதிபலிக்கிறது.
இப்படத்தைத் தயாரித்துள்ள பா.ஜ.க மாநில ஆன்மிகப் பிரிவு செயலாளர் சிவபிரபாகர் கூறுகையில்:”முதலில் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அரசியல் நெருக்கடி காரணமாகத் திரையரங்கு உரிமையாளர்கள் படத்தைத் திரையிடத் தயங்குகின்றனர். தியேட்டரை வாடகைக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள், எங்களால் நேரடியாகத் திரையிட முடியாது எனக் கூறிவிட்டனர். இதனால், மக்களிடம் கொண்டு சேர்க்க யூடியூப் தளமே சிறந்தது என முடிவு செய்துள்ளோம்.” இயக்கம்: வீரமுருகன். தயாரிப்பு: சிவபிரபாகர் மற்றும் சந்திரசேகரன். வெளியீடு: ‘தாமரை’ (Thamarai) யூடியூப் சேனல். சுமார் 60 நாட்களில் படமாக்கப்பட்ட இந்தப் படம், முதலில் இரண்டரை மணி நேரமாகத் திட்டமிடப்பட்டு, தற்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓடும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. எச்.ராஜாவின் இந்தப் புதிய முயற்சி பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
