தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான ஆயத்தப் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த முக்கிய நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், தேர்தல் சிறப்புப் பார்வையாளர் குல்தீப் நாராயணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் கலந்துகொண்டு, தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு ஐ.ஏ.எஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் முக்கிய நோக்கமாக, சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நடக்க இயலாத முதியோர்கள் உள்ளிட்ட அனைவரும் ஜனநாயகக் கடமையான வாக்களிப்பதில் இருந்து விடுபடக்கூடாது என்பது வலியுறுத்தப்பட்டது. “எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது” (No Voter to be Left Behind) என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் தாரக மந்திரத்தை முன்னிறுத்தி, விழிப்புணர்வு பதாகையில் முதல் கையெழுத்திட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்த சிறப்புப் பார்வையாளர், வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கையெழுத்து இயக்கத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பணிகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் எழுப்பிய சந்தேகங்களுக்குச் சிறப்புப் பார்வையாளர் விளக்கம் அளித்ததுடன், தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். நீலகிரி போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கத் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
















