கன்னியாகுமரி மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை, டெம்போ டிரைவர் ஒருவர் குடிபோதையில் ஓட்டி தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சனிக்கிழமை நள்ளிரவு உதவி ஆய்வாளர் அசோக் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, நாகர்கோவிலை சேர்ந்த அருள்சுந்தர் ஓட்டிய ஈச்சர் டெம்போவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவலர் பெல்வின் ஜோஸ் சோதனைக்காக பிரீத்திங் அனலைஸர் பயன்படுத்த முயன்றார். அந்த வேளையில் திடீரென டிரைவர் அருள்சுந்தர் டெம்போவை இயக்கி விட்டதால், கதவைப் பிடித்தபடி தொங்கிய நிலையில் காவலர் பெல்வின் ஜோஸ் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.
பின்னர், மேட்டுக்கடை பகுதியில் வாகனத்தை நிறுத்திய டிரைவர், காவலரை தாக்கியதும், தள்ளியதும் தெரிகிறது. கடுமையாக காயமடைந்த காவலர் பெல்வின் ஜோஸ் அருகிலிருந்தவர்கள் மூலம் பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவலர் அளித்த புகாரின் பேரில், டிரைவர் அருள்சுந்தர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார், அவரை நாகர்கோவில் பகுதியில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.















