தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க. தனது இளைஞரணி வலிமையைப் பறைசாற்ற மண்டல வாரியாக மாநாடுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், வரும் ஜனவரி 3-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருந்த தென் மண்டல தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு, தற்போது தேதி மற்றும் இடம் மாற்றப்பட்டு ஜனவரி 24-ஆம் தேதி விருதுநகரில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஈரோட்டில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் இந்த எழுச்சிக்குத் தக்க பதிலடி கொடுக்கும் விதமாகவும், தென் மாவட்டங்களில் தி.மு.க.வின் வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்த மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்தத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல மாநாட்டில் சுமார் 1.30 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக மதுரையில் மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தாலும், ஏற்கனவே மதுரையில் கட்சியின் பொதுக்குழு மற்றும் முக்கியக் கூட்டங்கள் நடத்தப்பட்டதைக் கருத்தில் கொண்டு, தென் மாவட்டங்களின் மையப்பகுதியாக இருக்கும் விருதுநகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கான விரிவான ஏற்பாடுகளைத் தென் மண்டலப் பொறுப்பாளரும் அமைச்சருமான தங்கம் தென்னரசு கவனித்து வருகிறார். மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளையும் ஒன்றிணைத்து, விஜய்யின் கூட்டத்தை விடப் பல மடங்கு இளைஞர்களைத் திரட்டிக் காட்டத் தி.மு.க. தலைமை முனைப்பு காட்டி வருகிறது.
தென் மண்டல மாநாட்டைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் டெல்டா மாவட்டங்களை இணைத்து அமைச்சர் கே.என். நேரு தலைமையிலும், மேற்கு மண்டலத்தை இணைத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலும் அடுத்தடுத்த மாநாடுகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக, மேற்கு மண்டல மாநாட்டை ஈரோடு அல்லது கோவையில் பிரம்மாண்டமாக நடத்தி, அப்பகுதியில் விஜய்யின் வருகையால் ஏற்பட்டுள்ள சலசலப்பை முறியடிக்கத் தி.மு.க. திட்டமிட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதே இலக்கு என்று முழங்கி வரும் தி.மு.க. இளைஞரணி, பூத் வாரியாக வலுவான கட்டமைப்பை உருவாக்க இம்மாநாடுகளை ஒரு பயிற்சி பாசறையாகப் பயன்படுத்தவுள்ளது.
