மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் ஜெயந்திராஜூ, பரவை பேரூராட்சித் தலைவர் கலாமீனாராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகளான வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாத்துரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக அரசு மக்கள் மீது அக்கறை கொண்டது போலப் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, “அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்த அரசு இந்த திமுக அரசு” என்று விமர்சித்த அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்துவோம் எனக் கூறி அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்ற திமுக, தற்போது ஆட்சி முடியும் தருவாயில் புதிய பெயர்களில் திட்டங்களை அறிவித்து அவர்களை ஏமாற்றி வருவதாகச் சாடினார். இதனாலேயே அரசு ஊழியர்கள் இன்று வீதியில் இறங்கிப் போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விவகாரத்திலும் திமுகவின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட செல்லூர் ராஜூ, எதிர்க்கட்சியாக இருந்தபோது 5,000 ரூபாய் வழங்கக் கோரிய முதலமைச்சர், தற்போது 3,000 ரூபாய் மட்டுமே வழங்கி மக்களைத் திருப்திப்படுத்தப் பார்ப்பதாகக் கூறினார். மேலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸே தற்போது ஆட்சி அதிகாரம் மற்றும் 60 தொகுதிகள் கேட்டு போர்க்கொடி தூக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முடக்கியதே திமுகதான் என்றும், எடப்பாடி பழனிசாமி அவர்களின் முயற்சியாலேயே ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டுத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அமைச்சர் பி.மூர்த்தியின் தலையீடு காரணமாகக் கட்சியினருக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகப் புகார் கூறிய அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்களை மீண்டும் முதலமைச்சராக அரியணையில் ஏற்றுவார்கள் என உறுதிபடத் தெரிவித்தார்.
