கோவை மாவட்டத்தின் மலைப்பிரதேசமான வால்பாறையில், தமிழக அரசின் உத்தரவின்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. தைப்பொங்கலை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்புடன் தலா 3,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தை வால்பாறை வட்டார நிர்வாகம் நேற்று முறைப்படி தொடங்கியது.
வால்பாறை கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் அமைந்துள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. வால்பாறை வட்டாட்சியர் அருள் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நகர்மன்றத் தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத் தலைவர் த.ம.ச. செந்தில்குமார், திமுக நகரச் செயலாளர் குட்டி (எ) சுதாகர் மற்றும் மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளரும் 4-வது வார்டு உறுப்பினருமான ஜே.பி.ஆர் (எ) பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.
வால்பாறை வட்டத்தில் மட்டும் மொத்தம் 15,429 குடும்ப அட்டைதாரர்கள் இந்தப் பொங்கல் பரிசைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக அரசு தரப்பிலிருந்து மொத்தம் 4 கோடியே 62 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்தப் பகுதி ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் சிரமமின்றிப் பொங்கல் தொகுப்பினைப் பெறும் வகையில், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு விநியோகப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் அத்தியாவசியப் பொருட்களுடன், கையில் கிடைக்கும் 3,000 ரூபாய் ரொக்கப் பணம் வால்பாறை பகுதி மக்களின் பண்டிகைக் காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெரிதும் உதவியாக இருக்கும் எனப் பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வரும் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்தப் பரிசுத் தொகை சென்றடைவதை உறுதி செய்ய வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தெரு வாரியாக டோக்கன் முறையைப் பின்பற்றி விநியோகம் செய்ய அந்தந்த அங்காடி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

















